நெல் தரிசில் பயறு வகை சாகுபடி விழிப்புணர்வு முகாம்
முதுகுளத்தூர்: ஜன: 31
வேளாண்மை துறை சார்பில் நெல் தரிசில் பயறு வகை சாகுபடி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது .
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் தேரிருவேலி பிரக்கா வளநாடு கிராமத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மை துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் வயல் தினவிழா மற்றும் நெல் தரிசில் பயறு வகை சாகுபடி விழிப்புணர்வு வேளாண்மை துணை இயக்குநர் ( உழவர் பயிற்சி நிலையம்) கண்ணையா அவர்களது தலைமையிலும் முதுகுளத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் கேசவன் ராமன் முன்னிலையிலும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் விவசாயிகளிடம் வேளாண்மை துணை இயக்குநர் கண்ணையா ( உழவர் பயிற்சி நிலையம்) அவர்கள் கூறுகையில் மழைக் காலங்களில் கண்மாய் மற்றும் பண்ணைக் குட்டைகளில் சேமிக்கப்பட்ட நீரினை பயன்படுத்தி உளுந்து, எள், பருத்தி போன்ற பயிர்களை இரண்டாம் போகமாகப் பயிரிட்டு அதிக லாபம் பெறலாம் என்று கூறினார். மேலும், விவசாயிகள் சந்தையில் தேவைப்படும் விளை பொருளின் விவரங்களை அறிந்து அதற்கேற்ப தங்களது சாகுபடி முறையை வகுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். அவரை தொடர்ந்து பேசிய முதுகுளத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் கேசவராமன் பருத்தியில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு செயல்விளக்கத் திடல் அமைக்கும் விவசாயிகளுக்கு வேளாண்மை துறை சார்பில் இடு பொருட்கள் , உயிர் உரங்கள் , உயிர் பூஞ்சான கொல்லி, மற்றும் பூச்சியினை கவர்ந்து இழுக்கும் பொறிகள் , வரப்பு பயிராக உளுந்தும் மானியத்தில் வழங்கப்படும் .மேலும் விவசாயிகள் தங்களது நிலங்களில் இயற்கை உரங்களை அதிகமாக இட்டு மண்ணை வளப்படுத்த வேண்டும் என்று கூறினார். அதனை தொடர்ந்து நெல் அறுவடை நடைபெற்ற வயலில் வயல் தின விழா அனுசரிக்கப்பட்டது. அறுவடைக்குப் பிந்தைய சேமிப்பு முறைகள் குறித்தும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்தும் எடுத்துரைக்கப் பட்டது .நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை வட்டார தொழில் நுட்ப மேலாளர் சுகன்யா, உதவி தொழில் நுட்ப மேலாளர் சேகர், உதவி வேளாண்மை அலுவலர் முத்துராஜ் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் வளநாடு கிராமத்தில் உள்ள 100 க்கும்.மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்