இலங்கையில் தொழில் நோக்கத்துடன் மட்டுமே சீனாவின் முதலீட்டுக்கு இலங்கை அரசு அனுமதித்துதிருச்சியில் இலங்கை மலையக மக்கள் முன்னணி தலைவர்ராதாகிருஷ்ணன் எம்.பி., பேட்டி
திருச்சி,
சீனா இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது கிடையாது. பொருளாதார ரீதியாக மட்டுமே அவர்கள் அங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள் திருச்சியில் இலங்கை மலையக மக்கள் முன்னணி தலைவர் ராதாகிருஷ்ணன் எம்.பி., பேட்டி
திருச்சி காஜா நகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீனை அவரது இல்லத்தில் சனிக்கிழமை நண்பகல் இலங்கை மலையக மக்கள் முன்னணி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ராதாகிருஷ்ணன் சந்தித்துப் பேசினார். இதைத்தொடர்ந்து ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இலங்கையில் 500 ஹெக்டேர் பரப்பளவில் சீனா துறைமுகம் அமைத்து வருகிறது. 70 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன. இலங்கையில் தொழில் நோக்கத்துடன் மட்டுமே சீனாவின் முதலீட்டுக்கு இலங்கை அரசு அனுமதித்து வருகிறது. இந்தியாவுடன் இலங்கை நெருங்கி செயல்பட்டுவருகிறது. சீனாவின் இந்த திடீர் நடவடிக்கை காரணமாக பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுமோ என்ற அச்சம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் மூன்று தீவுகளை சீனா கையகப்படுத்தியுள்ளது. காற்றாலை மின்சாரம் தயாரிப்பதற்காக இந்த மூன்று தீவுகளும் சீனா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இலங்கை அகதிகள் முகாம்களை மறுவாழ்வு இல்லங்களாக தமிழக முதல்வர் ஸ்டாலின் மாற்றியமைத்தது பாராட்டுக்குரியது. இதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். அதேபோல் தாயகம் திரும்ப விரும்பும் இலங்கை தமிழர்களுக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்று ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. எனினும் இதில் இலங்கை தமிழர்கள் புரிந்து முடிவு எடுக்கவேண்டும். தற்போது வடகிழக்கு பகுதிகளிலிருந்து போர் காரணமாக வெளியேறியவர்கள் மீண்டும் தாயகம் திரும்புவதை எவ்வித தயக்கமும் இல்லை. அவர்கள் தாராளமாக தாயகம் திரும்பி தங்களது வாழ்க்கையை தொடரலாம். ஆனால் மலையக தமிழ் மக்கள் விரும்பும் தாயகம் திரும்புவது வீணான செயலாகும். அவர்கள் மலையகத்திற்கு திரும்பி தோட்டத் தொழிலில் ஈடுபட கூடிய வாய்ப்பு அங்கு இல்லை. வேலை வாய்ப்பும் இல்லை. அதனால் அவர்கள் தாயகம் திரும்புவது தேவையற்றது. ஆகவே அவர்களுக்கு இந்தியாவிலேயே உதவிகளையும், அவர்கள் இந்தியாவிலேயே தொடர்ந்து தங்கி வாழ்வதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு இருந்தாலும் அவர்களது அபிலாசைகள் நிறைவேற்றப்படவில்லை. அவரது உரிமைகள் கிடைக்கவில்லை. சுதந்திரமாக வெளியில் நடமாட முடியாத நிலை உள்ளது. கொரோனா காரணமாக இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அங்கு உணவுக்கு பஞ்சம் ஏற்படவில்லை. அடுத்த 6 மாத காலத்தில் நிலைமை சீராகும். பொதுவாக ஒரு ஆட்சி ஏற்பட்டு அமைக்கப்பட்டு 4வது ஆண்டில் விரக்தி ஏற்படும். ஆனால் இலங்கையில் தற்போதைய ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் விரக்தி அடைந்துள்ளனர். சீனா இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது கிடையாது. பொருளாதார ரீதியாக மட்டுமே அவர்கள் அங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு நாட்டின் சட்ட திட்டங்களில் மற்ற நாடுகள் தலையிடக்கூடாது. அந்த வகையில் தமிழக முகாம் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் இலங்கை அரசு தலையிட முடியாது இவ்வாறு அவர் கூறினார். எம்.கே. ஷாகுல் ஹமீது