திருச்சி வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
திருச்சி, ஆகஸ்ட் -26,
திருச்சி மாவட்டம்,ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற வீர ஆஞ்சநேயர் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 24-ந் தேதி காலை சுதர்சன ஹோமம், மகாகணபதி ஹோமம் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் காவிரியிலிருந்து திருமஞ்சனம் எடுத்து வரப்பட்டது. மாலை முதல்கால யாகசாலை பூஜை, வாஸ்து பூஜை, மண்டல கும்ப பூஜை, பூர்ணாஹீதி, மகாதீபாராதனை நடைபெற்றது. 25-ந்தேதி காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜை, காயத்ரிஹோமம், பூர்ணா ஹீதி, வேத திவ்யபிரபந்த சாத்து முறை, தீபாராதனை நடைபெற்றது.
26-ந்தேதி காலை விஸ்வரூப தரிசனம், கோபூஜை, நான்காம் கால யாகசாலை பூஜை, புண்ணியாவாசனம், தோரண பாலிகை, பூர்ணா ஹீதி, மஹாதீபாரதனை, மங்கள வாத்தியத்துடன் கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் காலை 10 மணிக்கு வீர ஆஞ்சநேயர் சன்னதி திருக்கோபுரம் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலை மஹாஅபிஷேகம் மற்றும் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.