தோ்தல் அறிக்கையில் முதல்வா் அறிவித்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் அங்கீகாரமற்ற மனைகளைப் பதிவு செய்யும் பதிவுத் துறை அலுவலர்கள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் திருச்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சா் பி.மூா்த்தி பேட்டி
திருச்சி,
தோ்தல் அறிக்கையில் முதல்வா் அறிவித்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். அங்கீகாரமற்ற மனைகளைப் பதிவு செய்யும் பதிவுத் துறை அலுவலர்கள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
மாநில வணிக வரி மற்றும் பதிவுத் துறை சார்பில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த வணிகர் சங்கப் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் பதிவுத் துறையின் திருச்சி மற்றும் தஞ்சாவூர் பதிவு மண்டல சீராய்வுக் கூட்டம் ஆகியன திருச்சி தேசியக் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாநில வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வரவேற்றார். பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், இளைஞர் நலன்- விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன் மற்றும் அரசு செயலர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தின்போது, சரக்குகளுக்கான புதுப்பிக்கப்பட்ட வரி விவர புத்தகத்தை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட, சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பெற்றுக் கொண்டார். கூட்டத்துக்குப் பின் நேற்று மாலை மாநில வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்களிடம் நேர்மையாக தொழில் செய்யும் வணிகர்களுக்கு இந்த அரசு உற்ற நண்பனாக இருக்கும். அதேசமயம், போலியாக ஜிஎஸ்டி வாங்கிக் கொண்டு வணிகர்களுக்கு தவறான பாதையைக் காட்டும் அலுவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
பத்திரப்பதிவுத் துறையில் அங்கீகாரமற்ற மனைகளைப் பதிவு செய்யக் கூடாது என்றும், இடைத்தரகர்கள் இன்றி குறிப்பிட்ட நேரத்தில் உரியவர்களை அலுவலகத்துக்கு வரவழைத்து பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கீகாரமற்ற மனைகளைப் பதிவு செய்யும் அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். போலியாக பத்திரங்கள் பதிவு செய்வதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரசுக்கு வருவாய் அதிகரிக்கும் வகையில், தவறாக தொழில் செய்பவா்களைக் கண்டறிந்து அதை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். ஜிஎஸ்டியிலுள்ள ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து, வணிகா்கள் முறையாக வரி செலுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டைவிட நிகழாண்டில் வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் நிச்சயம் வரி வருவாய் அதிகரிக்கும். கடந்த 10 ஆண்டு காலம் வணிகா் நல வாரியம் அமைக்கப்படாமல் இருந்தது. விரைவில் வணிகா் நல வாரியம் அமைக்கப்படும்.
தோ்தல் அறிக்கையில் முதல்வா் அறிவித்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். பெட்ரோல், டீசல் விலை மீதான வரி விதிப்பில் மத்திய அரசு சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக உள்ளது. மத்திய அரசு அதிக வரியை வசூல் செய்கிறது. பெட்ரோல் டீசல் விலை உயா்வைக் குறைக்க வலியுறுத்தி வருகிறோம்.
பத்திரப்பதிவு செய்ய டோக்கன் முறையை அறிமுகப்படுத்தி உள்ளோம். அடுத்த ஒரு மாதக் காலத்தில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நீண்ட நேரம் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்படாது.
வணிகா் நலனில் எதுவெல்லாம் நடைமுறை சாத்தியமா இருக்குமோ, அதை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வோம் இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, வணிக வரி மற்றும் பதிவுத் துறை அரசு செயலர் பா.ஜோதி நிர்மலாசாமி, முதன்மைச் செயலரும் வணிக வரித் துறை ஆணையருமான எம்.ஏ.சித்திக், பதிவுத் துறை தலைவர் ம.ப.சிவனருள் ஆகியோர் உடனிருந்தனர். கே.எம். ஷாகுல்ஹமித்