மாவட்ட ஆட்சியா்களுக்கு தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் சக்கரபாணி உத்தரவு.
திருச்சி, கரூர், புதுக்கோட்டை மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் கோரும் இடத்தில் உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் அமைத்துத் தர வேண்டும் மாவட்ட ஆட்சியா்களுக்கு தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி உத்தரவிட்டார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த துறை அலுவலர்களுடனான உணவுப்பொருள் மற்றும் பொது வினியோகம், நெல் கொள்முதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமை தாங்கினார். நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆய்வின் போது துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.அப்போது அமைச்சர் சக்கரபாணி கூறுகையில், “உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக வேண்டும். கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி 2-ம் தவணையாக ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் தொகுப்பு பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி சென்றடையும்படி அதிகாரிகள் பணியாற்ற வேண்டும். பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அனைத்து பொருட்களையும் தரமான பொருட்களாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக ஊழியர்கள், கூட்டுறவுத் துறை ஊழியர்கள், மாவட்ட அலுவலர்கள், உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறை ஆகியோர் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே பணியினை செய்கிறோம் என்ற உணர்வோடு பணியாற்றிட வேண்டும்.
விவசாயிகள் கோரும் இடத்தில் உடனடியாக நெல்கொள்முதல் நிலையங்களைத் திறக்க மாவட்ட ஆட்சியா்கள் முன்வர வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்குத் தேவையான தளவாடப் பொருள்களை தொலைநோக்குப் பாா்வையுடன் கொள்முதல் செய்து தயாராக வைத்திருக்க வேண்டும்.
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்கள், ஊழியா்கள் மற்றும் கூட்டுறவுத் துறை, மாவட்ட வழங்கல் பிரிவு, உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவுகளில் பணிபுரியும் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றும் உணா்வை வளா்த்துக் கொள்ள வேண்டும். திருச்சி, கரூா், பெரம்பலூா், புதுக்கோட்டை மாவட்ட அலுவலா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளைத் திறம்படச் செய்து முடித்திட வேண்டும். எந்தவிதப் புகாா்களுக்கும் இடமளிக்கக் கூடாது இவ்வாறு அவர்
கூறினார்.
நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், “விவசாயிகள் கோரும் பட்சத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கட்டாயமாக திறக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தேவையான தளவாட பொருட்களை தொலைநோக்கு பார்வையுடன் கொள்முதல் செய்ய தயார் நிலையில் அதிகாரிகள் வைத்திட வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் கூட்டுறவு உணவுப்பொருள் மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நசிமுதீன், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் ஆனந்தகுமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மேலாண்மை இயக்குனர் ராஜாராமன், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு மேலாண்மை இயக்குனர் சிவஞானம், கலெக்டர் எஸ்.சிவராசு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஷாஹுல் ஹமீது.