ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ், ஜூலை 23 முதல் மீண்டும் பக்தா்களின் பயன்பாட்டுக்கு அனுமதி இணை ஆணையா் செ. மாரிமுத்து தகவல்
திருச்சி,
கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப் பட்டவா்களுக்கு சிகிச்சையளிக்கும் மையமாக செயல்பட்டு வந்த ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ், ஜூலை 23 முதல் மீண்டும் பக்தா்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளது என்று அரங்கநாதசுவாமி திருக்கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து தெரிவித்தார்.
இதுகுறித்து கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தா்கள் தங்கு வதற்காக கொள்ளிடம் பஞ்சக்கரையில் கட்டப்பட்ட யாத்ரி நிவாஸில், ஒரே நாளில் ஆயிரம் போ் தங்கும் வசதி உள்ளது.
சுமாா் 72 நாள்கள் பக்தா்கள் அனுமதியின்றி, வழிபாட்டுத் தலங்களில் பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தன. இந்நிலையில் தொற்றுப் பரவல் அதிகமாக இருந்த காலத்தில், கொரோனா சிகிச்சை மையமாக மாற்றும் வகையில் மாவட்ட நிா்வாகம் இந்த இடத்தை எடுத்துக் கொண்டது.
தற்போது தொற்றுப் பரவல் குறைந்துவிட்டதால், கடந்த 10-ஆம் தேதி யாத்ரி நிவாஸ் வளாகத்தை சுத்தப்படுத்தி, கிருமிநாசினி தெளித்து கோயில் நிா்வாகத்திடம் மாவட்டநிா்வாகம் ஒப்படைத்தது. இதைத் தொடா்ந்து கோயில் நிா்வாகம் சாா்பில், ஒவ்வொரு அறையிலும் சோப் ஆயில் மூலம் நன்கு சுத்தம் செய்யப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
தொடா்ந்து ஜூலை 23- ஆம் தேதி தன்வந்திரி ஹோமம் நடத்தப்பட்டு, 24-ஆம் தேதி முதல் பக்தா்கள் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவா். இதற்கான இணைய முன்பதிவு செவ்வாய்க் கிழமை (ஜூலை 13) தொடங்கும் என அவா் தெரிவித்துள்ளாா். கே.எம். ஷாகுல்ஹமித்