வையம்பட்டி அருகே பொன்னணியாறு அணையை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு ஆய்வு
திருச்சி
வையம்பட்டி அருகே உள்ள பொன்னணியாறு அணை பலத்த மழை பெய்தும் கடந்த 10 ஆண்டுகளாக நிரம்பவில்லை. எனவே தூர்வார வேண்டும் என்று ஆய்வுக்கு வந்த கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே பொன்னணியாறு அணை உள்ளது. 51 அடி உயரம் கொள்ளளவு கொண்ட இந்த அணையில் சமீபத்தில் பெய்த மழையால் ஒரே நாளில் நீர்மட்டம் 5 அடி உயர்ந்தது. தற்போது, அணையில் 29 அடி தண்ணீர் உள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவ மழையை யொட்டி அணையை நேற்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த அணையின் உதவி செயற்பொறியாளர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் நீர் இருப்பு குறித்து கேட்டறிந்தார்.இதே போல் வடகிழக்கு பருவமழைக்கான முன்னேற்பாடுகள் குறித்தும் பேசினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த பொன்னணியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி கரூர் மாவட்டத்திலும், பாசன வசதி திருச்சி மாவட்டத்திலும் உள்ளது. பலத்த மழை பெய்தும், சுமார் 10 ஆண்டுகளாக இந்த அணை நிரம்பவில்லை. அணையில் சுமார் 10 அடிக்கு மேல் சேறும் சகதியுமாக தான் உள்ளது. இதனால் 29 அடி நீர்மட்டம் இருந்தாலும் நீர் இருப்பு குறைவாகத்தான் இருக்கும்.
பலத்த மழை பெய்தும் அணைக்கு நீர் வரும் பாதை முறையாக இல்லாததால் அணையின் நீர்மட்டம் கொள்ளவை எட்டவில்லை. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று ஆய்வுக்கு வந்த மாவட்ட ஆட்சியர் சு.சிவராசுயிடம் பொன்னணியாறு அணை பாசனப்பகுதி விவசாய வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிற் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதில், பொன்னணியாறு மற்றும் கண்ணூத்து அணைக்கு காவிரி நீரை குழாய் மூலம் கொண்டு செல்லும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். மேலும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள புதர்களை அகற்றிட வேண்டும் என்று கூறியிருந்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்குப்பதிவு பெட்டிகள் தயார் நிலையில் உள்ளதைஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம் கருங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தையும், பதிவேடுகளையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும் கருங்குளம் ரேஷன்கடையில் அரிசி மற்றும் கோதுமை தரத்தையும் ஆய்வு செய்தார்.
பின்னர் மருங்காபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்குப்பதிவு பெட்டிகள் தயார் நிலையில் உள்ளதை ஆய்வுசெய்தார். கருங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க அலுவலகப் பதிவேடுகள், அப்பகுதி ரேஷன் கடையில் இருப்பு வைக்கப்பட்ட அரிசி, கோதுமையை ஆய்வு செய்தாா். அப்போது வையம்பட்டி, மருங்காபுரி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாபு அண்ணாதுரை, ரேவதி, ஸ்ரீனிவாச பெருமாள், அழகுமணி, பொதுப்பணித் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.