ராமநாதபுரத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம்,செப்,27- ராமநாதபுரத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியாத அளவிற்கு நிதி பிரச்சனையில் ஒவ்வொரு ஊராட்சியும் சிக்கி தவிக்கிறது. ஊராட்சிக்கு வழங்கப்படும் நிதியை உடனடியாக வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வரும் அனைத்து பணிகளையும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி ஊராட்சி மன்ற தலைவர் மூலமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் ஒரு சில ஊராட்சிகளில் வேண்டும் என்று அதிகாரிகள் மிரட்டும் பாணியில் 204 போடுவேன் என்று மிரட்டுவதை தடுக்க வேண்டும். மத்திய அரசு வழங்கிய 15வது நிதிக்குழு மானியத்தை ஊராட்சியின் அடிப்படை வசதிகள் செயல்படுத்த ஊராட்சி தீர்மானம் அடிப்படையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அனுமதி வழங்க வேண்டும்.
பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் படி ஊராட்சி மன்ற தலைவர்கள் முழுமையான அதிகாரத்தை செயல்படுத்த வேண்டும்.
தனி அலுவலர்கள் காலத்தில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவருக்கு பதிலாக போடப்பட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலகங்களை அரசு திரும்பப் பெற வேண்டும். என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம் குறித்து கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் செந்தில் குமார் செய்தியாளர்களிடம் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும்… திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் வெங்கலக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் எஸ். டி. செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் டாக்டர் சித்ரா மருது, பொருளாளர் முகமது இக்பால், ஒருங்கிணைப்பாளர் கோகிலா ராஜேந்திரன் உள்பட ஏராளமான ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
எம்.சோமசுந்தரம்