முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 3 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை
திருச்சி
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 3 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு ஏ.வ.வேலு , உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட எம்.பி.க்கள் மற்றும் தி.மு.க.வினரும் சென்றனர். இது போல் கோபாலபுரம், சிஐடி காலனி இல்லத்திற்கும் சென்ற ஸ்டாலின் அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதி படத்துக்கு மரியாதை செலுத்தினார்.
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், கருணாநிதி நினைவு தின நிகழ்ச்சியை மிகப்பெரிய அளவில் நடத்த திமுக நிர்வாகிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், கொரோனா 3-வது அலைபரவல் எச்சரிக்கை காரணமாகவும், கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருவதாலும் பெரிய அளவிலான நிகழ்ச்சிகளைத் தவிர்த்து அவரவர் வீடுகள் முன்பு கருணாநிதி படம் வைத்து அஞ்சலி செலுத்துமாறு நிர்வாகிகள், தொண்டர்களுக்கு கட்சித் தலைவரும், முதல்-அமைச்சருமான ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

திமுக தலைவரும், தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கடந்த 2018 ஆகஸ்ட் 7ம் தேதி உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் காலமானார். கலைஞர் 50 ஆண்டுகள் தொடர்ந்து கட்சியின் தலைவராகவும், 5 முறை தமிழக முதல்வராகவும் பதவியேற்றுள்ளார். மேலும் தான் போட்டியிட்ட 13 சட்டமன்ற தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்று, எந்த தலைவர்களாலும் முறியடிக்க முடியாத வரலாற்று சாதனை படைத்தவர். அத்தனை சாதனைகளுக்கும் சொந்தக்காரரான கலைஞரின் ஒவ்வொரு நினைவு நாளிலும் திமுக சார்பில் அமைதி பேரணி மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கலைஞரின் 3ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்படுகிறது. நினைவு நாளை முன்னிட்டு மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில்பின்னர்கருணாநிதி நினை விடத்திற்கு சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன்,கே.என்.நேரு,எ.வ.வேலு,பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், பொன்முடி, ஐ.பெரியசாமி, செந்தில்பாலாஜி,பெரியகருப்பன்,கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்தி ரன், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் கனிமொழி, தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஜெகத்ரட்சகன் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.
காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோரும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள். கருணாநிதி நினைவிடத்தில் தி.மு.க. தொண்டர்கள் சமூக இடைவெளியை கடை பிடித்து அஞ்சலி செலுத்துவதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லம், சி.ஐ.டி. காலனியில் உள்ள இல்லம், அண்ணா அறிவாலயம், முரசொலி அலுவலகம் ஆகிய இடங்களுக்கும் சென்று கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் திமுக தொண்டர்கள் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் நேற்று 3-ஆம் ஆண்டு நினைவு தினத்தைமுன்னிட்டுஇதனையொட்டி கருணாநிதியின் பேரனும், சேப்பாக்கம்-திருவல்லிக் கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், தனது முகநூல் பதிவில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளி யிட்டுள்ளார். அந்த பதிவில், ”முத்தமிழறிஞரின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று. இளைஞரணி செயலாளர்- சட்டமன்ற உறுப்பினர் என பலரின் பாராட்டை பெற்றாலும், பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது. அவர் வழியில் நம்மை இயக்கும் மாண்புமிகு முதல்வரின் கரம்பற்றி தமிழ்நாட்டின் மேன்மைக்கு உழைப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
திருக்குவளையில் தொடங்கிய கருணாநிதியின் பயணம்
1937ஆம் ஆண்டில் அரசுப்பள்ளிகளில் இந்திப் படிப்பு கட்டாயமாக்கப்பட்டது. அதனைக் கண்டித்து, நீதிக்கட்சி தொடர் போராட்டங்களை முன்னெடுத்தது. 13 வயதிலேயே கருணாநிதி இந்தப் போராட்டங்களால் ஈர்க்கப்பட்டார். தன் பள்ளி நண்பர்களை ஒருங்கிணைத்து, ‘இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பு’ என்ற இயக்கத்தைத் தொடங்கினார். இந்தி எதிர்ப்புப் பேரணிகளையும் நடத்தினார். போராட்டத்திற்கு மாணவர்களைத் திரட்ட அந்த சிறு வயதிலேயே ‘மாணவ நேசன்’ என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினார். 17 வயதில் தமிழ்நாடு மாணவர் மன்றத்தின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
1942ஆம் ஆண்டில் அண்ணா நடத்திய திராவிட நாடு பத்திரிகையில் கருணாநிதி எழுதிய இளமைப்பலி என்ற படைப்பு வெளியானது. அது அண்ணாவைப் பெரிதும் கவர, திருவாரூரில் ஒரு விழாவுக்காக வந்திருந்த அவர், கருணாநிதியை அழைத்துப் பாராட்டினார்.
1957ஆம் ஆண்டு முதன்முறையாக தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் நுழைந்த கருணாநிதி, 13 முறை தமிழ்நாடு சட்டசபைக்கும் ஒரு முறை சட்ட மேலவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாகப் பணியாற்றியவர். 1967ஆம் ஆண்டில் அண்ணா தமிழ்நாட்டின் முதல்வரான போது அவரது அமைச்சரவையில் போக்குவரத்து மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து திறம்பட பணியாற்றியவர்.
கருணாநிதி 1969 ஆம் ஆண்டு முதன்முறையாக தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்றார். ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தவர் என்ற பெருமைக்குரியவர். அரசியல் மட்டுமன்றி, தமிழ் இலக்கியம், தமிழ் திரைப்படங்களில் திரைக்கதை, வசனம் போன்ற துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். நாடகம், கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், வரலாறு என எல்லா இலக்கியத் தளங்களிலும் தனக்கென தனி முத்திரை பதித்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. தனது 94 வயது வரைக்கும் ஓய்வறியாத சூரியனாக உழைத்த கருணாநிதி 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் கடற்கரையில் ஓய்வெடுத்து வருகிறார். அவரது மூன்றாவது ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. எம்.கே. ஷாகுல் ஹமீது