முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் புகழாரம்.
திருச்சி; ஆளுநர் உரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களின் நல அரசு என்ற பேரும் புகழும் பெற்ற அரசாகிறது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் தெரிவித்தார்.
ஆளுநர் உரைக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வரவேற்பு. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது :
தமிழக 16வது சட்டப் பேரவையைத் தொடங்கி வைத்து, ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் அவர்கள், சென்னை கலைவாணர் அரங்கில் 21.06.2021ல் உரையாற்றியுள்ளார். முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அமைச்சரவையின் பாராட்டத்தக்க கொள்கைகள், செயல் திட்டங்கள், அவை சம்பந்தமான சட்டங்கள் பற்றிய விளக்கங்கள் பற்றிய வரலாற்று ஆவணமாக ஆளுநர் உரை அமைந்துள்ளது.
நாட்டின் இறையாண்மையை நிலைநிறுத்தி, மதச்சார்பின்மையின் அடிப்படையில் சமத்துவச் சமுதாய அமைப்புக்கு ஆளுநர் உரை கட்டியம் கூறியிருக்கிறது. எவ்வித பாரபட்சமும் இல்லாத, எல்லோரையும் அரவணைத்துச் செல்லும், தமிழக ‘மக்களின் அரசு’ என்று எல்லோரும் நம்பி, அதை வாயாற, உளமாற நவின்று, இன்பப்பெருக்கோடு மக்களின் கொண்டாட்டத்தைப் பார்க்கும்போது, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் மீண்டெழுந்துவிட்டது என்ற பூரிப்பை எல்லோருக்கும் தருகிறது என்பதைப் பார்க்கிறோம்.
‘‘வலுவான மாநில அரசுகள் மூலமாகவே ஒரு வலிமையான ஒன்றிய அரசை உருவாக்கிட முடியும்’’ என்பதையும் ‘உறவுக்குக் கை கொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்’ என்பதையும் ஆளுநர் உரை தெளிவுபடுத்தியிருக்கிறது.
பதவியேற்ற ஒன்றரை மாத காலத்திற்குள் ‘கோவிட்’ தொற்றொன்றின் கோரப் பிடியிலிருந்து தமிழக மக்களை விடுவிக்கும் களப் பணிகளை உலகமே பாராட்டக்கூடிய அளவுக்கு மேற்கொண்டு, விரைவில் தொற்றுப் பிணியிலிருந்து தமிழக மக்களை முழுமையாக விடுவிக்க எடுத்துவரும் முயற்சி களை ஆளுநர் பாராட்டியிருப்பது மிகவும் பொருத்தமானதாகும்.
பெருந்தொற்றுப் பரவலைத் தொடர்ந்து, மக்களின் பொருளாதார சிக்கல் தீரும் வகையில் நிவாரணம் அளித்துள்ள அரசுக்குப் பாராட்டுக் கிடைத்திருக்கிறது. உண்மையில் ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்று அரசு மகிழ்வதை இது விவரிக்கிறது.
சென்னை கிங் மருத்துவமனைத் திட்டம், மதுரையில் கலைஞர் நூலகம் போன்ற திட்டங்கள் தமிழகத்துக்குப் பெருமை சேர்க்கும். ‘உங்கள் தொகதியில் முதலமைச்சர்’ திட்டத்தில் இதுவுரை 63,500 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது என்பது அற்புதச் செய்தியாகும். இப்போது ‘எங்கும் எப்போதும் அரசு சேவைகள்’ துவங்கப்பட்டுள்ளன.
தமிழக முதலமைச்சருக்கு பொருளாதாரத் துறையில் ஆலோசனை வழங்குவதற்கு குழு அமைப்பது, ‘நாட்டின் வளர்ச்சிக்கு தமிழகம் தரும் முன்னோடித் திட்டம்’ என்ற பெருமையைத் தந்திருக்கிறது. சச்சார் குழு அறிக்கையை நினைவுபடுத்தி, சிறுபான்மையினரின் கல்வி, பொருளாதாரம் மற்றும் வீட்டு வசதிகள் பற்றிய அறிவிப்பு மிகுந்த வரவேற்புக்குரியதாகும்.
தமிழகம், நீர் பற்றாக்குறை மாநிலமாகவே உள்ளது. கலைஞர் துவக்கிய கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் விரிவுபடுத்துவதும், ஏரிகள் முழுமையாகத் தூர்வாரப்படுவதும், காட்டாறுகளில் மழை காலத்தில் பெருக்கொடுத்து ஓடும் வெள்ளத்தைத் தடுக்கும் தடுப்பணைகளைக் கட்டுவதும் மிகவும் அவசியமாகிறது.
முந்தைய அரசு, உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் களை முறையாக நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. தொகுதி எல்லை வரைவு செய்யும்போது, வீடுகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்து வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதனால் சில வார்டுகளில் மூவாயிரம் வாக்காளர் என்றும், மக்கள் பெருகி வாழும் குடிசைப் பகுதி வார்டுகளில் முப்பதாயிரம் வாக்காளர் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. வீடுகளின் எண்ணிக்கை அடிப்படையில் இல்லாமல், மக்கள் தொகை அடிப்படையிலேயே வாக்காளர் பட்டியல் தயாரித்து உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள் நடத்துவதுதான் நியாயமானதாக அமையும்.
‘நீட்’ தேர்வு ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை ஆராய நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு, மத்திய அரசின் நீட் தேர்வு பற்றிய கண்ணோட்டத்தை மாற்றும் என நம்புவோம்.
பன்னெடுங்காலங்களாக தமிழகத்தைத் தாயகமாகக் கொண்டு வாழும் இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் பொருத்தமானது. இதற்கு ஆதாரமாக மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டமே எல்லாவற்றுக்கும் மூல காரணமாகி நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சி.ஏ.ஏ & இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு நீக்கினால்தான் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படுவது சாத்தியமாகும். சி.ஏ.ஏ. இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தமிழக அரசு குரல் கொடுக்க வேண்டும் என்பது எல்லோருடைய எதிர்பார்ப்பும் ஆகும்.
முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, எல்லோருக்கான எழில் அரசு – மக்கள் நல அரசு என்ற பேரும் புகழும் பெற்றுச் சிறந்தோங்கும் என் பதில் எல்லோருக்கும் நம்பிக்கையுண்டு இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷாஹுல் ஹமீது.