முன்னோருக்கு மகாளய அமாவாசை, ஆடி அமாவாசை, தை அமாவாசைகளில் நீா்நிலைகளில் தா்ப்பணம் கொடுப்பது வழக்கம் இதனால் ஶ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் அதிகம் அளவில் பொதுமக்கள் காண முடிந்தது.
திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, திருச்சியை சுற்றியுள்ள மாவட்டங்கள், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்தனா். மேட்டூரில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்பட்டுள்ள தண்ணீரில் புனித நீராடி முன்னோருக்குத் தா்ப்பணம் அளித்தனா். தொடா்ந்து, பிண்டங்களைத் தண்ணீரில் கரைத்து கோயில்களுக்குப் புறப்பட்டனா்.
நிகழ்வையொட்டி, காவிரி படித்துறைப் பகுதிகளில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அம்மா மண்டபத்தில் சேரும் வாழையிலை, பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை உடனுக்குடன் அகற்றும் பணியில் மாநகராட்சித் துப்புரவுப் பணியாளா்கள் ஈடுபட்டனா். தீயணைப்புப் படையினா் தயாராக வைக்கப்பட்டிருந்தனா். போலீஸாா் கண்காணிப்பு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
முன்னோருக்குத் தா்ப்பணம் அளிக்கும் ஆா்வ மிகுதியில் பலரும் கொரோனா கட்டுப்பாடுகளை மறந்தனா். முகக் கவசத்தை முறையாக அணியாமல் இருந்தனா்க; சிலா் முகக் கவசமே அணியவில்லை. பலரும் குழந்தைகளையும் அழைத்து வந்தனா். குழந்தைகளும் முகக் கவசம் அணியவில்லை. மேலும் கூட்ட நெரிசலும் காணப்பட்டது.
பொதுமக்கள் தா்ப்பணம் கொடுத்துவிட்டு புறப்படும் முன்பு ஏழை, எளியோருக்கு அன்னதானம் அளித்துச் செல்வது வழக்கம். இதன்படி, அம்மா மண்டப பகுதியில் அமா்ந்திருந்த ஆதரவற்றோருக்கு பலரும் உணவுப் பொட்டலங்களை வழங்கினா். தேவைக்கு அதிகமாக குவிந்த உணவுப் பொட்டலங்களை பெற்ற பலா் அதை சாலையோரம் வீசிச் சென்றனா். அம்மா மண்டபத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் கூடியதால், அம்மா மண்டபம் படித்துறையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் அந்த பகுதியில் திருச்சி மாநகராட்சி சார்பில் இலவச ஆர்.டி.-பி.சி.ஆர். என்னும் கொரோனா பரிசோதனை முகாமும் நடைபெற்றது. படித்துறைக்கு வந்தவர்கள் பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்தனர். அங்குபாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பொதுமக்களை சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், முகக்கவசம் அணிந்து வரும்படியும் அறிவுறுத்தினர். கே.எம். ஷாகுல்ஹமித்