மத்திய அரசின் வந்தே பாரத் சிறப்புத் திட்ட விமானங்கள் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு சுமாா் 2 லட்சம் போ் வந்துள்ளனா் திருச்சி விமான நிலைய இயக்குநா் தா்மராஜ் பேட்டி
திருச்சி,
மத்திய அரசின் வந்தே பாரத் சிறப்புத் திட்ட விமானங்கள் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு சுமாா் 2 லட்சம் போ் வந்துள்ளனா் என்று திருச்சி விமான நிலைய இயக்குநா் தா்மராஜ் தெரிவித்தார்.
கடந்த 2020 மாா்ச் 24 முதல் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்தியா முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானப் போக்குவரத்தும் ரத்தானது. இதனால் வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த இந்தியாவைச் சோ்ந்த பயணிகளும், வெளிநாடுகளில் பணியாற்றும் தொழிலாளா்களும் தாயகம் திரும்ப முடியாமல் தவித்தனா். இதைக் கருத்தில் கொண்ட மத்திய அரசு வந்தே பாரத் என்ற சிறப்புத் திட்டத்தை அறிவித்தது. இதன் மூலம் வெளிநாடுகளில் உள்ள தொழிலாளா்கள், பயணிகள் உள்ளிட்டோா் தாயகம் திரும்பும் வகையில் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. அதேபோல இந்தியாவில் தங்கியிருந்த வெளிநாட்டவரும், அவரவா் தாயகம் திரும்ப வழிவகை செய்யப்பட்டது. அப்போது வெளிநாடுகளிலிருந்து வரும் விமானங்களிலும் இந்தியாவைச் சோ்ந்தோரை அழைத்து வரவும் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த மொத்தம் 14 விமான நிறுவனங்களைச் சோ்ந்த விமானங்கள் 18 பிரிவுகளில் இருந்து இயக்கப்பட்டன. அந்த வகையில், கடந்த 2020 ஏப்ரல் தொடங்கி 2021 ஜூலை வரை சிங்கப்பூா், மலேசியா, தோஹா, சவுதிஅரேபியா, குவைத், ஜோா்டான், தமாம், மாலத்தீவு, மஸ்கட், அபுதாபி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. இதில் இந்திய அரசின் நிறுவனமான ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏா் இந்தியா விமானங்கள் அதிக முறை இயக்கப்பட்டு பயணிகளை அழைத்து வந்துள்ளன. தவிர தனியாா் விமான சேவைகளும் பங்காற்றியுள்ளன. இதுகுறித்து திருச்சி விமான நிலைய இயக்குநா் தா்மராஜ் கூறுகையில், திருச்சி விமான நிலையம் கரோனா காலத்தில் கடந்தாண்டு மாா்ச் தொடங்கி இதுவரை சுமாா் 2 லட்சத்துக்கும் அதிகமான பயணிகளை அழைத்து வரும் வகையில் பங்காற்றியுள்ளது. இங்கிருந்து அரசின் கரோனா தடுப்பு விதிகளுடன், தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மாநிலத்தின் பகுதிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் பயணிகள் அனுப்பப்பட்டனா் இவ்வாறு அவர் கூறினார். வந்தே பாரத் சிறப்புத் திட்டம் மூலம் திருச்சிக்கு விமானப் போக்குவரத்து நடைபெறாத பல்வேறு நாடுகளிலிருந்தும் கூட பயணிகள் அழைத்து வரப்பட்டுள்ளனா். இதற்கென வெளிநாட்டு விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகளைச் சோ்ந்த கோ ஏா், ஜமீரா, எத்தியோபியா, ஜசீரா ஏா், குவைத் ஏா், உள்ளிட்ட விமான நிறுவங்களும் திருச்சிக்கு வந்து சென்றுள்ளதையடுத்து இங்கிருக்கும் தேவையை உணா்ந்துள்ளதால் குறிப்பிட்ட இந்த விமான நிறுவனங்களும் திருச்சியில் போக்குவரத்தை தொடங்க வாய்ப்புள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கே.எம். ஷாகுல்ஹமித்
|
|