மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் முஸ்லிம் லீக் தலைவர்களோடு நட்பு பாராட்டியவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களுடன் மடத்திலேயே சந்தித்து கலந்துரையாடி உண்மையை உணர்ந்து பல்வேறு பதட்டங்களை தடுத்து நிறுத்திய பெருமை அவருக்கு உண்டு பேராசிரியர் கே எம். காதர்மொகிதீன் புகழாரம்
திருச்சி,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே எம். காதர்மொகிதீன் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில் கூறியதாவது : தமிழகத்தில் தொன்மையான புகழ்பெற்ற மதுரை ஆதீனத்தின் 292 ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாதர் சுவாமிகள் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியும் மிகவும் துக்கமும் வேதனையும் அடைந்தேன்.
1982 ஆம் ஆண்டு மதுரை ஆதீனம் சந்திக்க அவரது மடத்திற்கு சிராஜூல் மில்லத் ஆ.கா.அ. அப்துல், நானும், வந்தவாசி அப்துல் வஹாப், மதுரை கமாலுதீன், மதுரை அப்துல் வஹாப் ஆகியோர் சென்று முஸ்லிம் சமுதாயம் என்னென்ன பணிகள் செய்து கொண்டு இருக்கிறது என்றும் முஸ்லிம் மார்க்கம் என்றால் என்ன என்பதை சில விளக்கங்கள் கொடுத்து அதன் பின் சில புத்தங்களை கொடுத்து இதை படித்து பாருங்கள் முஸ்லிம் மார்க்கம் என்றால் என்ன என்பதை விளக்கமாக இந்த புத்தகத்தில் இருக்கிறது என்பதை சொல்லி விட்டு வந்தோம்.
அடுத்த சில மாதங்களில் என்னை தொடர்பு கொண்டு நீங்கள் கொடுத்த புத்தங்களை படித்தேன் அதில் பல்வேறு விஷயங்களை தெரிந்து கொண்டேன் என்று பகிர்ந்து கொண்டார். அதன் பிறகு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மீலாது நபிகள் நாயகம் விழாவில் நானும், மதுரை ஆதீனமும் கலந்து கொண்டு பேசி இருக்கிறோம். அது மட்டுமல்லாமல் அவர் மீலாது நபி விழா மற்றும் பல்வேறு சமய நல்லிணக்க விழாவில் கலந்து கொண்டு பேசி இருக்கிறார். என்னுடனும் கடந்த பல ஆண்டுகளாக நட்புடன் இருந்து அவ்வப்போது உரையாடுவார். நான் உடல்நலக்குறைவால் இருந்த போது என்ன தொடர்பு கொண்டு எனது உடல் நலத்தை தொடர்ந்து நலம் விசாரித்து வந்தவர்.
அனைத்து சமுதாய மக்களிடமும் நல்லிணக்கத்தோடு வாழ்ந்தவர், மீலாது நபி விழா மேடைகளில் முதலில் இறைவனிடம் கையேந்துங்கள் இல்லை என்று சொல்வது இல்லை என்ற வரிகளை சொல்லிய பிறகு தான் அவரது பேச்சை தொடங்குவார். நபிகள் நாயகத்தின் மாண்புகளை சிறப்பாக பதிவு செய்தவர். முஸ்லிம் லீக் தலைவர்களோடு நட்பு பாராட்டியவர். தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களுடன் மடத்திலேயே சந்தித்து கலந்துரையாடி உண்மையை உணர்ந்து பல்வேறு பதட்டங்களை தடுத்து நிறுத்திய பெருமை அவருக்கு உண்டு.
தமிழகத்தில் சமூக நல்லிணக்கம் தழைத்தோங்க தனது இறுதி மூச்சுவரை களமாடியவர். பல இஸ்லாமிய மேடைகளில் சரளமாக திருக்குர்ஆன் வசனங்களை ஓதிக் காட்டி அதற்கு விளக்கமும் அளிக்கும் திறன் கொண்டவர். இஸ்லாமிய சமயப் பெரியவர்கள் பலருடனும் நெருங்கிய தோழமை பாராட்டியவர். தமிழ் பக்தி இலக்கியங்களை பரப்புவதில் பெருந்தொண்டு ஆற்றியவர். ஆன்மீகவாதிகளில் துணிச்சலாக அரசியல் பணியும் செய்தவர். உலக மதங்கள் குறித்தான தெளிவான பார்வை உடையவர். மதுரை ஆதீன மடம் அவர் விட்டுச்சென்ற சமூக நல்லிணக்க பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
இவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். இவரை இழந்து வாடும் உற்றார் உறவினர்கள் மதுரை ஆதீனம் மடத்தைச் சேர்ந்தவர்களுக்கும் எனது சார்பிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் இரங்கல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கே.எம்.ஷாகுல்ஹமித்