மணப்பாறை பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சட்டப்பேரவை உறுப்பினா் ப. அப்துல்சமது பாா்வையிட்டு ஆய்வு
திருச்சி
மணப்பாறை பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சட்டப்பேரவை உறுப்பினா் ப. அப்துல்சமது பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா். கடந்த வெள்ளிக்கிழமை இரவு பெய்த மழையால் மணப்பாறை பகுதிகளிலுள்ள குளங்கள் நிரம்பின. மேலும் குளக்கரைகளில் உடைப்பு ஏற்பட்டு, குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளநீா் சூழ்ந்தது.இதனால் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து வெளியேறிய பொதுமக்கள் தங்குவதற்கு அருகிலிருந்த பள்ளிவாசல், மாரியம்மன் கோயில் மண்டபத்தில் தங்குவதற்கும், உணவு, உடைக்கும் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்தது.

அதன்படி மழை வெள்ளத்தால் வீடுகள் தண்ணீர் புகுந்ததால் வீட்டில் உள்ள மக்களை மீட்டு நேற்று முன்தினம் இரவு மணப்பாறை தக்வா பள்ளிவாசலில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு அறிவுருத்தினார். இதைத் தொடா்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மணப்பாறை ராஜீவ் நகா், கரிக்கான்குளம், முனியப்பன்குளம், மஸ்தான்தெரு, மோா்குளம், சேதுரத்தினபுரம், காந்திநகா், அரசு குடியிருப்பு, பேருந்து நிலையப் பகுதி, பூங்கா சாலை, பூசாரிக்களம், கீரைத் தோட்டம் பகுதிகளை சட்டப்பேரவை உறுப்பினா் ப. அப்துல்சமது ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா். நீா்வழிப் பாதைகளை விரைந்து முறைப்படுத்துமாறு அலுவலா்களைக் கேட்டுக்கொண்டாா்.
மருங்காபுரி ஒன்றியத்தில் உள்ள அம்மா சத்திரம் ஊராட்சி சீலாம்பட்டியில் இரண்டு நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் பழுதடைந்த சாலைகள், நீர் போகும் வழிகளை ஆய்வு செய்தார். மணப்பாறை தொகுதி புத்தாநத்தம், வையம்பட்டி இளங்காகுறிஞ்சி, மணப்பாறை மணப்பட்டி, ஆகிய மூன்று இடங்களில் புதிதாக 63 கே.வி. மின்மாற்றிகளை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
ஆய்வின் போது மணப்பாறை நகராட்சி ஆணையா்(பொ) செந்தில், நகர திமுக செயலா் கீதா ஆ.மைக்கேல்ராஜ், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் காதா்மைதீன், திருச்சி மாவட்டச் செயலாளர் அ. பைஸ்அஹமது ஒன்றிய பெருந்தலைவர், அரசு அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி பிரதிநிதிகள், திமுகழக நிர்வாகிகள் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தார்கள்.