மணப்பாறை அரசு மருத்துவமனையில் சர்க்கரை நோய்க்கு பாகற்காய் பாதகுளியல் சிகிச்சை அறிமுகம்
திருச்சி
மணப்பாறை அரசு மருத்துவமனையில், சர்க்கரை நோய்க்கு பாகற்காய் பாதகுளியல் சிகிச்சை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது என்று டாக்டர் தமிழ்மணி தெரிவித்தார். இதுகுறித்து மணப்பாறை அரசு மருத்துவமனையின் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா பிரிவு உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் தமிழ்மணி கூறியதாவது:சர்க்கரை நோய்க்கு பண்டைய மருத்துவ நுாலில், பாகற்காய் பாதகுளியல் சிகிச்சை பற்றிய குறிப்பு உள்ளது. பாகற்காயை நன்றாக அரைத்து தண்ணீர் கலந்து வாளியில் ஊற்றி, இரு குதிங்கால்கள் நனையும் அளவுக்கு, தினமும் 30 நிமிடங்கள் வைக்க வேண்டும்.அப்போது, உடலில் கசப்புத்தன்மை பரவும்.
தொடர்ந்து, 48 நாட்கள் இந்த சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அப்புறம் வாரம் இருமுறை தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதன்மூலம் சர்க்கரை நோயை, மாத்திரைகள் எடுக்காமலேயே கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.பாகற்காய் உடலில் உள்ள கழிவுகளை அழிக்கும் தன்மை கொண்டது. அதேபோல், தோல் உள்ளிட்ட அலர்ஜிகளுக்கும் இந்த சிகிச்சை சிறப்பான பலன் அளிக்கும். தற்போது, மணப்பாறையில் மட்டும் இந்த சிகிச்சை அளிக்கப் படுகிறது.இந்த சிகிச்சை துவங்கிய ஒரு மாதத்துக்குள், 200க்கும் மேற்பட்டோர் பலன் அடைந்துள்ளனர். சிகிச்சை எடுத்துக் கொண்ட சில நாட்களில் சர்க்கரை நோயின் அளவு குறைகிறது. மேலும் இன்சுலின், மாத்திரை எடுத்துக் கொள்வதை பாதியாக குறைத்தும், சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.