புதுவை அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப கோரி இளைஞர் காங்கிரசார் போராட்டம்
புதுச்சேரி,
புதுவை அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவேண்டும், காவலர் பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை இளைஞர் காங்கிரசார் வலியுறுத்தி வருகிறார்கள். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி காந்தி நகரில் உள்ள வேலைவாயப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி அவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தையொட்டி அலுவலக கதவு மூடப்பட்டு இருந்தது. அதன் மீது ஏறி நின்று, இளைஞர் காங்கிரசார் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்துக்கு இளைஞர் காங்கிரஸ் அகில இந்திய செயலாளர் லெனின் பிரசாத் தலைமை தாங்கினார். புதுவை செயல் தலைவர்கள் விக்னேஷ், வேல்முருகன் உள்பட பலர் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.