பிரதமருடன் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் சந்திப்பு
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோதியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலக அறையில் தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று சந்தித்துப் பேசினார்கள்.
சுமார் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்தது. தமிழக அரசியல் நிலவரம், உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் நிலைப்பாடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அவர்கள் பேசியதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, பிரதமரை சந்திக்க டெல்லி வந்த எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோரும் வந்திருந்தனர். ஆனால், பிரதமரை சந்தித்தபோது அவரது அறைக்குள் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மட்டுமே இருந்ததாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரதமரை சந்தித்த பிறகு எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் டெல்லி சாகேத்தில் அரசு ஒதுக்கிய நிலத்தில் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை பார்வையிடச் சென்றனர். அவர்கள் எந்த கோரிக்கையுடன் பிரதமரை சந்தித்தனர் என்ற விவரம் இன்னும் அலுவல்பூர்வமாக வெளியாகவில்லை. படம் உதவி பாலிமர் நியுஸ் புவி.பாலாஜி