பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், அரசுகளுக்குத் தொல்லை கொடுப்பதற்காகவே ஆளுநர்களைப் பயன்படுத்தி வருகின்றார்கள் மக்களின் உணர்வுகளையொட்டி சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும் மணப்பாறையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் பேட்டி
திருச்சி,
மக்களின் உணர்வுகளையொட்டி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் கூறியுள்ளார். திருச்சி மாவட்டம், மணப்பாறை பெரிய மணப்பட்டியில் கட்சி அலுவலகத் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்திருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் கட்சிகளின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளித்தார்கள்.
மணப்பாறை அடுத்த பெரியமணப்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத் திறப்பு விழா, தமிழறிஞரும் மூத்த கட்சி நிா்வாகியுமான ப. தட்சிணாமூா்த்தி படத்திறப்பு விழா கட்சி நிா்வாகிகள் இல்ல நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மணப்பாறை எம்எல்ஏ ப. அப்துல்சமது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புகா் மாவட்டச் செயலா் த. இந்திரஜித், மாவட்ட துணைச் செயலா் எஸ். செல்வராஜ், நகரச் செயலா் ஜனசக்தி உசேன், ஒன்றியச் செயலா்கள் சி. தங்கராஜ், ஏ.டி. சண்முகானந்தம், மருங்காபுரி வட்டச் செயலா் சி. வெள்ளக்கண்ணு, திமுக ஒன்றியச் செயலா் சி. ராமசாமி, விசிக மாவட்ட பொருளாளா் ந. மதனகோபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பின்னர் மணப்பாறை சுற்றுலா மாளிகையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:”வழக்கமாக பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தால், நாட்டுக்கு, மக்களுக்கு ஏதோ நல்லது நடக்கப்போகிறது என்று கருதுவோம். ஆனால், பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தால், பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை உள்ளிட்ட நாட்டுக்கு ஏதோ பெரிய ஆபத்து நடக்கப்போகிறது என்பது போன்ற நிலைமை ஏற்பட்டுள்ளது மிகுந்த கவலைக்குரியது.
மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு எதிராகத் தொடர்ந்து சட்டங்களை இயற்றுவது, அந்தச் சட்டங்களின்படி நடவடிக்கை எடுப்பது ஆகிய காரணங்களால் பாஜகவின் செல்வாக்கு படிப்படியாகச் சரிந்து வருகிறது. தங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ளாமல், முதல்வர், மத்திய அமைச்சர்கள், மாநிலத் தலைவர்களை மாற்றுவதன் மூலம் சரிசெய்துவிடலாம் என்பது பகல் கனவாகத்தான் முடியும்.
மறைமுகமாக மனுதர்மக் கொள்கையைப் புகுத்துவதற்கான உள்நோக்கம் கொண்டது நீட் தேர்வு. நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் தற்கொலைப் பாதையைத் தேர்ந்தெடுக்கக் கூடாது. சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு, நிலைமைகளைப் புரிந்துகொண்டு ஆளுநர் காலதாமதமின்றி ஒப்புதல் வழங்க வேண்டும். இல்லையெனில், தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தீவிரமாகும். அதேபோல், குடியுரிமைச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும். மக்களின் உணர்வுகளையொட்டி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும். கொள்கைரீதியாக உருவான திமுக தலைமையிலான அணி, எந்தச் சலனத்துக்கும் இடமின்றி தொடர்கிறது. கூட்டணியில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது.
மத்திய அரசைக் கண்டித்து செப்.20 முதல் செப்.30 வரை எதிர்க்கட்சிகள் நடத்தவுள்ள நாடு தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக, செப்.20-ம் தேதி தமிழ்நாட்டில் அவரவர் இல்லங்களில் கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாகப் பங்கேற்கும். இதேபோல், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, செப்.27-ம் தேதி நாடு தழுவிய கடையடைப்பு, வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த விவசாய சங்கக் கூட்டமைப்பினர் முடிவு செய்து, அரசியல் கட்சிகளிடம் ஆதரவு கோரி வருகின்றனர். அந்தப் போராட்டத்தைத் தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பினரும் வெற்றிகரமாக நடத்திக் கொடுக்க வேண்டும். பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், அரசுகளுக்குத் தொல்லை கொடுப்பதற்காகவே ஆளுநர்களைப் பயன்படுத்தி வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் ஒழிப்புத் துறையின் நடவடிக்கைகளை எதிர்த்து அதிமுகவினர் போராட்டங்களில் ஈடுபடுவது தவறு” இவ்வாறு முத்தரசன் தெரிவித்தார்.