பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திருச்சி சமயபுரம் ஆட்டுச்சந்தை களை கட்டியது. நேற்று கூடிய சந்தையில் சுமார் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
திருச்சி,
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திருச்சி சமயபுரம் ஆட்டுச்சந்தை களை கட்டியது. நேற்று கூடிய சந்தையில் சுமார் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.
சமயபுரத்தில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்று ஆட்டுச்சந்தை கூடுவது வழக்கம். இந்த ஆட்டு சந்தைக்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது மதுரை, விருதுநகர், சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஆத்தூர், கெங்கவல்லி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு வரும்.
இந்த ஆடுகளை வாங்குவதற்காக ஆடுவளர்ப்போர் மற்றும் வியாபாரிகள் உள்ளிட்டோர் ஏராளமானோர் வந்து செல்வார்கள். மேலும் பக்ரீத், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு இஸ்லாமியர்கள் ஏராளமானோர் இங்கு நேரடியாக வந்து ஆடுகளை வாங்கி செல்வார்கள்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஆட்டுச்சந்தை கூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. இதைத்தொடர்ந்து பல மாதங்களாக ஆட்டுச்சந்தை நடைபெறவில்லை. இந்தநிலையில் ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து சமயபுரம் ஆட்டுச்சந்தை நேற்று மீண்டும் கூடியது. இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆடு வளர்ப்போர் மற்றும் விற்பனை யாளர்கள் லாரி, வேன், ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஆடுகளை ஏற்றிக்கொண்டு அதி காலையில் இருந்தே சமயபுரம் ஆட்டுச்சந்தையில் குவிய தொடங்கினர்.
பக்ரீத் பண்டிகைக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ளதால் குர்பானி கொடுக்க ஆடுகளை வாங்க ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்கள் தங்களுக்கு பிடித்த ஆடுகளை பேரம் பேசி இரு சக்கர வாகனம், ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றி சென்றனர்.
ஒரு ஆடு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் விற்பனையாகின. நேற்று மட்டும் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்ததாகவும், சுமார் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை ஆனதாகவும் வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர். பல மாதங்களுக்குப் பிறகு நேற்று ஆட்டுச்சந்தை கூடியதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கே.எம். ஷாகுல்ஹமித்