நாங்கள் மிசாவையே பார்த்தவர்கள். அண்ணாமலைக்கு எல்லாம் பயப்படத் தேவை இல்லை பா.ஜ.க-வில் தலைவராகி இருக்கிறார் அவர் மக்களிடம் பெயர் வாங்கவேண்டும் என்பதற்காகவே இதுபோன்று பேசுகிறார் தி.மு.க ஒருபோதும் பயப்படாது அமைச்சர் கே.என் நேரு பேட்டி
திருச்சி,
“அண்ணாமலைக்கு எல்லாம் பயப்படத் தேவை இல்லை. அவர் புதிதாக பா.ஜ.க-வில் தலைவராகி இருக்கிறார். அவர் மக்களிடம் பெயர் வாங்கவேண்டும் என்பதற்காகவே இதுபோன்று பேசுகிறார். இதற்கெல்லாம் தி.மு.க ஒருபோதும் பயப்படாது” என்று அமைச்சர் கே.என் நேரு தெரிவித்தார்.
திருச்சி கம்பரசம்பேட்டை, பெரியார் நகர் ஆகிய நீர்சேகரிப்பு கிணறுகளில் ரூ.8.96 கோடியில் புதிதாக நீள்சுற்று வட்டக் குழாய்கள் அமைத்தல், புதிதாக மோட்டார் பம்புசெட் மற்றும் டீசல் ஜெனரேட்டர் அமைத்தல் ஆகிய முதல் தொகுப்புப் பணிகள், ரூ.19.46 கோடியில் புதிதாக முதன்மை சமநிலை நீர்தேக்கத் தொட்டி, நீர் பரிசோதனை ஆய்வகம், நடைபாலம் அமைத்தல் உள்ளிட்ட 2-வது தொகுப்புப் பணிகள் நேற்று தொடங்கப்பட்டன. இதற்காக உறையூர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு 2 தொகுப்புப் பணிகளையும் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறியது: திருச்சி மாநகரில் ரூ.28.34 கோடியில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன. எனவே, மாநகராட்சி விரிவுபடுத்தப்பட்டாலும், மக்கள்தொகை பெருகினாலும் அதற்கேற்ப அங்கு குடிநீர் எடுக்கலாம். இன்னும் ஒரே ஆண்டில் திருச்சி மாநகர மக்கள் அனைவருக்கும் 24 மணி நேரமும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும். உய்யக்கொண்டான் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க வாய்க்காலின் இரு கரைகளிலும் குழாய்கள் அமைத்து, கழிவுநீரை அந்தக் குழாய்கள் வழியாக கொண்டு சென்று புதை சாக்கடையுடன் இணைக்க திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.
“பாரதிய ஜனதா கட்சி சார்பில் தஞ்சையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் தலைவர் அண்ணாமலை பாரதிய ஜனதா-வுக்கு இடையூறு ஏற்படுமானால் தி.மு.க.-வின் பிசினஸில் கை வைப்போம்” எனச் சொல்லியிருக்கிறாரே என்று பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டதற்கு, தி.மு.க எதிர்ப்பை சமாளிக்கும் வலுவான கட்சி. நாங்கள் சந்திக்காத எதிர்ப்பா? எமர்ஜென்சியையே எதிர்த்த இயக்கம் இது.நாங்கள் மிசாவையே பார்த்தவர்கள். அண்ணாமலைக்கு எல்லாம் பயப்படத் தேவை இல்லை. அண்ணாமலை புதிதாக பா.ஜ.க-வின் தலைவராகி இருக்கிறார். அவர் மக்களிடம் பெயர் வாங்கவேண்டும் என்பதற்காகவே இதுபோன்று பேசுகிறார். இதற்கெல்லாம் தி.மு.க பயப்படாது.
அண்ணாமலையைப் போலப் பலரைப் பார்த்திருக்கிறோம்” என்றார். மீண்டும் அண்ணா மலையைப் பற்றி பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அவரை விட்டுத்தள்ளுங்கள். வேறு எதாவது கேளுங்கள்” என்று தனக்கே உண்டான பாணியில் கிண்டல் அடித்தார் இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், மாநகராட்சி செயற்பொறியாளர்கள் சிவபாதம், குமரேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கே.எம்.ஷாகுல்ஹமித்