தொண்டி அருகே 1200 அடியில் ஆழ்துளைக்கிணறு அமைக்கும் பணி
திருவாடானை.ஜூலை.20,
தொண்டி அருகே 1200 அடியில் ஆழ்துளைக்கிணறு அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் குடி நீர் வரும் நேரத்தை கிராம மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ளது கொடிப்பங்கு கிராமம். திருவாடானை பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட இக்கிராமத்திற்குட்பட்டு கொடிப்பங்கு, நாரேந்தல், கருத்தப்பத்தை, செங்காலன்வயல், சவேரியார்பட்டிணம், மண்மலக்கரை, சிறுதவயல், அகரவயல், ராஜாக்கவயல், வேளாங்குடி, விளக்கநேந்தல் குக்கிராமங்கள் பல உள்ளது. இங்கு கூட்டுக்குடிநீர் திட்டத்தின் வழியாக வரும்; குடிநீர் பற்றாக்குறையாக இருப்பதால் பஞ்சாயத்து தலைவி சாந்திரவிச்சந்திரனிடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டரை சந்தித்து கிராமத்தின் அத்தியாவசிய தேவையான குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க பஞ்சாயத்து தலைவி கேட்டுக்கொண்டதன்படி மாவட்ட கலெக்டர் நேரடியாக கிராமத்தை ஆய்வு செய்தார்.
இப்பிரச்சனைக்கு தீர்வாக, திருவாடானை யூனியன் பொது நிதியிலிருந்து சுமார் ரூ 21 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 1200 அடியில் ஆழ்துளை கிணறு அமைக்க முடிவு செய்யப்பட்டு அப்பகுதியைச்சேர்ந்த தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் பிரசாத் தலைமையில் யூனியன் சேர்மன் முகமது முக்தார், 15-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் ராஜாராம் மற்றும் தி.மு.க பிரமுகர்கள், கிராம மக்கள் ஆகியோர் முன்னிலையில் பூமி பூஜை போடப்பட்டு குடிநீர் எடுக்கும் பணி தொடங்கியது. இரவு, பகலாக ஆழ்துளை அமைக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருப்பதால் தாகம் தீர்க்க குடிதண்ணீர் வரும் நேரத்தை கிராம மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். சிறப்பு செய்தியாளர் வாசு.ஜெயந்தன்