தொண்டியில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் பங்குதாரர்கள் கூட்டம்
தொண்டி, செப்.17-
இராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் திருவாடானை நெற்களஞ்சியம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் பங்குதாரர்கள் கூட்டம் தொண்டி அலுவலகத்தில் நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் அருண்குமார் தலைமையில் நடைபெற்றது.
இராமநாதபுர மாவட்ட வேளாண் வணிகம் மற்றும் சந்தைபடுத்துதல் துறையின் துணை இயக்குநர் மூர்த்தி, தொண்டி கிளை கனரா வங்கியின் மேலாளர் சங்கர முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராமப்புற பெண்கள் மேம்பாட்டு தொண்டு நிறுவன நிர்வாக இயக்குநர் வெள்ளி மலர் அனைவரையும் வரவேற்று பேசினார். சமூக ஆர்வலர் சார்லஸ் நிகழச்சியை தொகுத்து வழங்கினார். நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் பேசும்போது, உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் வளர்ச்சி பெற பங்குதாரர்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிகவும் இன்றியமையாததாகும். அனைவரும் தங்களுக்கு தேவையான இடுபொருட்களை பாதியளவாவது உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திடம் பெற வேண்டும். அதேபோல தாங்கள் விளைவிக்கும் பொருட்களில் ஒரு பகுதியாவது உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திடம் விற்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் விவசாயிகள் லாபம் அடைய முடியும். உழவர் உற்பத்தியாளர் நிறுவனமும் வளர்ச்சி அடைய முடியும் என்று பேசினார் இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட துணை இயக்குனர் மூர்த்தி பேசும்போது, மத்திய அரசு எல்லா திட்டங்களையும் தனிநபர்களுக்கு கொடுப்பதில்லை. குழுக்களை மையப்படுத்திதான் வழங்குகின்றனர்.நபார்டு வங்கி மூலமாக இந்தியா முழுவதும் 10 ஆயிரம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அரசு வழங்கக்கூடிய அனைத்து திட்டங்களையும் முறையாக பெற்று விவசாயிகள் பயன்பெறும் வகையில் வழங்கிட வேண்டும். ஏற்கனவே துறை மூலமாக ரூ.60 லட்சம் மதிப்பிலான மதிப்புக்கூட்டு உபகரணங்களை உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளோம் என்று கூறினார். அதனைத்தொடர்ந்து இந்நிகழ்சியில் கலந்துகொண்ட பங்குதாரர்களுக்கு பங்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முடிவில் திருவாடானை நெற் களஞ்சியம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஜெயபால் நன்றி கூறினார்.