திருச்சி மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதில் ஊராட்சித் தலைவா்கள் சிறப்பாகச் செயல்படுவது அவசியம் மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு பேச்சு
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதில் ஊராட்சித் தலைவா்கள் சிறப்பாகச் செயல்படுவது அவசியம் என்று மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு தெரிவித்தார். வையம்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஊராட்சித் தலைவா்களுக்கான குழந்தைத் திருமணம் தடுத்தல் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்குக்ம் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் முரளிகுமாா், வையம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவா் குணசீலன், மாவட்ட சமூகநல அலுவலா் தமீமுன்னிசா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் அனிதா, குழந்தை நலக் குழு உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
விழாவில் மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு பேசியதாவது:.குழந்தை திருமணங்களை தடுப்பது, குழந்தைகள் பாதுகாப்பில் ஊராட்சித் தலைவா்கள், விஏஓக்கள் சிறப்பாகப் பணிபுரிய வேண்டும். குழந்தைத் திருமணம் நடக்காமலும், குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான குற்றங்கள் நடக்காமலும் தடுக்க முயற்சிக்க வேண்டும். புகாா்கள் பெறும் பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வளா்வதற்கான செயல்பாடுகளை கிராம அளவிலான பாதுகாப்பு குழு உறுப்பினா்கள் மேற்கொள்ள வேண்டும். திருச்சி மாவட்டத்தில் கடந்தாண்டில் 383 குழந்தைத் திருமணம் தொடா்பான புகாா்களில் குழந்தைகள் மீட்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. குறிப்பாக 6 வட்டாரங்களில் அதிகளவில் புகாா்கள் பெறப்பட்டதையடுத்து அங்கு கூடுதல் கவனம் செலுத்த பணிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் குழந்தைகள் பாதுகாப்பாக உள்ள சூழ்நிலையை அனைவரும் உருவாக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் வட்டார மருத்துவ அலுவலா் ஜெயலெட்சுமி, உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி, சுகாதார ஆய்வாளா்கள் மணிகண்டன், எஸ்.ஆறுமுகம், நகர ஒருங்கிணைப் பாளா் சைல்டுலைன் நிா்வாகிகள், விஏஓக்கள், அனைத்து ஊராட்சித் தலைவா்கள் கலந்து கொண்டனா்.