திருச்சி மாருதி மருத்துவமனையில் ஸ்டெம் செல் சிகிச்சை அறிமுகம் அனைத்துவிதமான நோய்களுக்கும் பயன்படுத்தலாம்
திருச்சி, ஆகஸ்ட் . 17 –
திருச்சி மாவட்டம், மாருதி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ஹேமா, டாக்டர் ரவி, டாக்டர் பவன் குப்தா, மணிப்பால் பல்கலைக்கழக ஸ்டெம்புடிக் சிஇஓ மனோகர் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது; நடந்தகடந்த 10 ஆண்டுக்கும் மேலான ஆராய்ச்சியில் ஸ்டெம் செல் சிகிச்சைக்கு புதிய பரிணாமம் கிடைத்துள்ளது. இதன் மூலம் தீராத நோய், எலும்பு, பல் நோய் போன்றவற்றை ஸ்டெம் செல் மூலம் குணப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்தியாவிலேயே முதன்முறையாக சிப்லா நிறுவனம் இந்த மருந்து வடிவிலான ஸ்டெம்செல்லை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்டெம் செல் மருந்தை அனைத்து விதமான நோய்களுக்கும், அனைத்து மருத்துவர்களும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மணிப்பால் பல்கலைக்கழகமும், சிப்லா நிறுவனமும் கடந்த 13 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. இளம் வயது மனிதர்களிடமிருந்து மஜ்ஜையை எடுத்து 50 ஆயிரம் டோஸ்களாக பிரித்து 2 குப்பியில் அடைக்கப்பட்டுள்ளது. ஒரு குப்பியில் 200 மில்லியன் ஸ்டெம்செல்லும், மற்றொரு குப்பியில் 150 மில்லியன் ஸ்டெம் செல்லும் என இரண்டு குப்பிகளாக உருவாக்கப்பட்டுள்ளது.
சர்க்கரை நோய் அதிகரிப்பு காரணமாக கால்களில் ரத்த ஓட்டத்தில் அடைப்பு ஏற்படும். இதன் காரணமாக கால் அல்லது விரல்களை எடுக்கவேண்டிய சூழ்நிலை நோயாளிகளுக்கு உருவாகும். இந்த ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் கால், விரல்களை அகற்றாமல் முற்றிலும் காலில் உள்ள காயங்களை சரிசெய்ய முடியும். இந்த மருந்தை அனைத்து மருத்துவர்களும் எளிதாக பெற்று நோய்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும். சர்க்கரை நோயைத் தொடர்ந்து மூட்டுத் தேய்மானத்திற்கு இந்த ஸ்டெம்செல் சிகிச்சை மூலம் குணப்படுத்துவதற்கான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. தற்போது அரசின் அங்கீகாரத்திற்காக விண்ணப்பிக்கப் பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து இருதயம், கல்லீரல், சிறுநீரகம் போன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை தவிர்த்து அதற்கு மாற்றாக ஸ்டெம்செல் சிகிச்சையை மேற்கொள்ளலாம். ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் மீண்டும் உறுப்புக்கள் நல்லமுறையில் செயல்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. உலகத்திற்கே, இந்தியாவிற்கே முன்னெடுப்பாக இந்த சிகிச்சை முறை திருச்சி மாருதி மருத்துவமனையில் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சிக்காக 250 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த புதிய ஆராய்ச்சி முழுக்க முழுக்க மேக் இன் இந்தியா, மேட் இன் இந்தியா ஆகும். முதற்கட்டமாக விலங்குகளிடம் பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் படிப்படியாக பாதுகாப்பு அம்சங்களுடன் மனிதர்களிடம் சோதனை செய்யப்பட்டது . மாத்திரை தயாரிப்பது போல் ரசாயன மூலம் உற்பத்தி செய்வது கிடையாது.
பயோடெக் முறையில் உற்பத்தி செய்யக் கூடியதாகும். இது வரை 200 நோயாளிகளிடம் பரிசோதனை செய்யப்பட்டது சிறந்த முறையில் குணமடைந்த காரணத்தால் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே உள்ள ஸ்டெம் செல் சிகிச்சை என்பது குறிப்பிட்ட சில மனிதர்களிடம் எடுத்து அவர்களோடு ஒத்துப்போகும் மனிதர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும். ஆனால் இந்த மருந்து வடிவிலான ஸ்டெம்செல் சிகிச்சை என்பது அவ்வாறு ஒப்பிட வேண்டிய அவசியம் இல்லை. யாருக்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
இந்த மருந்து குறிப்பிட்ட தட்ப வெட்ப நிலையில் இருக்க வேண்டும். குளிர்சாதனப் பெட்டியில் இருந்து வெளியில் எடுத்த 4 மணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும். இந்த மருந்தில் தொழில்நுட்பமும், அறிவியலும் அடங்கியுள்ளது.
ஜப்பான், ஐரோப்பா, சீனா உள்ளிட்ட 18 நாடுகளில் இதற்கான காப்புரிமை பெறப்பட்டுள்ளது. மனிதனின் ஒரு கிலோ எடைக்கு 2 மில்லியன் ஸ்டெம்செல் தேவைப்படும். மனிதனின் எடைக்கு ஏற்ப இதன் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
200 மில்லியன் ஸ்டெம்செல் கொண்ட ஒரு குப்பி 2 லட்சம் ரூபாய்க்கும், 150 மில்லியன் ஸ்டெம்செல் கொண்ட குப்பி ரூ. 1.65 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது. என செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். நமது நிருபர்