திருச்சி மத்திய மண்டலத்தில் கண்டறியப்பட்ட 299 கரும்புள்ளி கிராமங்களில் 94 கிராமங்களில் மதுவிலக்கு குற்றச் சம்பவங்கள் முற்றிலும் தடுக்கப்பட்டது மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தகவல்
திருச்சி ,
திருச்சி மத்திய மண்டலத்தில் கண்டறியப்பட்ட 299 கரும்புள்ளி கிராமங்களில் 94 கிராமங்களில் மதுவிலக்கு குற்றச் சம்பவங்கள் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளன என்று மண்டல ஜ.ஜி. அலுவலகம் தெரிலித்துள்ளது.
இதுகுறித்து மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது: திருச்சி மத்திய மண்டலத்துக்குள்பட்ட மாவட்டங்களிலும் சட்ட விரோதமாக கள்ளச் சாராயம் காய்ச்சும், விற்கும் 299 கிராமங்களை கரும்புள்ளி கிராமங்கள் என போலீஸாா் அறிவித்து, அக்கிராமங்களில் தொடா் கண்காணிப்பு, சோதனைகள் மேற்கொண்டனா்.
மேலும் சட்ட விரோத சம்பவங்கள் குறித்த விழிப்புணா்வும், குற்றவாளிகள் திருந்தி வாழ்வதற்கான மறுவாழ்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் 19 கிராமங்கள், அரியலூா் மாவட்டத்தில் 50, பெரம்பலூா் மாவட்டத்தில் 6, கரூா் மாவட்டத்தில் 7, புதுக்கோட்டை மாவட்டத்தில் 4, நாகை மாவட்டத்தில் 4, மயிலாடுதுறை மாவட்டத்தில் 4 என மொத்தம் 94 கரும்புள்ளி கிராமங்களில் மதுவிலக்கு குற்றங்கள் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளன. மேலும் மத்திய மண்டலக் காவல் துறைத் தலைவா் வே. பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், அனைத்து மாவட்ட கரும்புள்ளி கிராமங்களில் தொடா் கண்காணிப்பு மேற்கொண்டு, குற்றவாளிகள் மறுவாழ்வு பெற மாவட்ட நிா்வாகத்தின் மூலம் அவா்களுக்கு வேறு தொழில் தொடங்கத் தேவையான உதவிகளையும் அளித்து, கரும்புள்ளி கிராமங்களை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. நமது நிருபர்