திருச்சி ஜாமிஆ அன்வாருல் உலூம் அரபிக்கல்லூரி ஸ்தபாகர் அல்லாமா மர்ஹும் மவ்லவி அரபி அப்துஸ் ஸலாம் பெயரில் விருது, ஜம்இய்யதுல் அன்வார் மாணவ சொற்பயிற்சி மன்ற துவக்க விழாவில் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் பேச்சு
திருச்சி,
திருச்சி ஜாமிஆ அன்வாருல் உலூம் அரபிக்கல்லூரி ஸ்தபாகர் அல்லாமா மர்ஹும் மவ்லவி அரபி அப்துஸ் ஸலாம் பெயரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் விருது, பொற்கிழி வழங்க வேண்டும் கோரிக்கையை கட்சியின மேல்மட்ட நிர்வாகிகளுடன் கலந்து பேசி விருதுகள் வழங்குவது பற்றி முடிவு செய்யப்பட்டு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஜம்இய்யதுல் அன்வார் மாணவ சொற்பயிற்சி மன்ற துவக்க விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் தெரிவித்தார்.
திருச்சி ஜாமிஆ அன்வாருல் உலூம் அரபிக்கல்லூரியில் ஜம்இய்யதுல் அன்வார் மாணவ சொற்பயிற்சி மன்ற துவக்க விழா 18.09.2021 சனிக்கிழமை மகரிஃப் தொழுகைக்கு பிறகு அரபிக்கல்லூரி பள்ளிவாசலில் நடைபெற்றது. விழாவிற்கு திருச்சி ஜாமிஆ அன்வாருல் உலூம் அரபிக்கல்லூரி முதல்வரும், முஸ்லிம் தனியார் சட்ட வாரிய உறுப்பினருமான மவ்லவி முஃப்தி முஹம்மது ரூஹூல் ஹக் ரஷாதி தலைமை வகித்தார். நிகழ்ச்சியை அரபிக் கல்லூரி மாணவர் ஹாபிழ் அப்துர் ரஹ்மான் கிராஅத் ஒதி தொடங்கி வைத்தார். மாணவர் ஹாபிழ் காஜா முஹிய்யத்தீன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
விழாவிற்கு காஜா தொண்டு நிறுவன தலைவர் ஹாஜி ஏ.எஸ். ஷாகுல் ஹமீது, ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் துணை முதல்வர் முனைவர் ஹாஜி கமாலுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
சிறப்பு விருந்தினராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் கலந்து கொண்டு ஜம்இய்யதுல் அன்வார் மாணவ சொற்பயிற்சி மன்றத்தை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது : திருச்சி ஜாமிஆ அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரி தமிழக அளவில் புகழ் பெற்றது. இங்கு பயின்றவர்கள் திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த ஹாஃபிழ்களாகவும், மார்க்கத்தைக் கற்றறிந்து – மற்றவர்களுக்கும் எடுத்துரைக்கும் ஆலிமாகவும் உலகம் முழுக்க பரவி இருந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி தற்போது இங்கு பயின்று உருவாகிக் கொண்டிருக்கக்கூடிய மாணவச் செல்வங்கள் – இக்கல்லூரி அவர்களுக்கு அளித்த பேச்சாற்றல் எழுத்தாற்றலைக் கொண்டு இங்கே தமது திறமைகளை நன்கு வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதை அவதானிக்கும் நல்ல வாய்ப்பை நாங்களும் பெற்றிருக்கிறோம்.
இங்கே தங்கள் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பணப் பரிசு கொடுத்து உற்சாகப்படுத்துவோம் என முஸ்லிம் இலக்கிய கழக பொதுச் செயலாளர் கவிஞர் செய்யித் ஜாஃபர் கூறியிருக்கிறார். இது ஆயிரம் ரூபாய் என்ற அளவோடு நின்றுவிடாமல் – ஒவ்வோர் ஆண்டும் இப்படி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் மார்க்கம் அறிந்த மாணவக் கண்மணிகளுக்கு ஐந்தாயிரம் ரூபாய் எனும் அளவுக்கு செல்வது சிறப்பு என்று நான் கருதுகிறேன். அதைத் தீர்மானமாக நிறைவேற்றி செயல்படுத்துமாறு முஸ்லிம் இலக்கிய கழக அன்பர்களை நான் வேண்டிக்கொள்கிறேன்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் மாநாடுகளின்போது – தமிழகத்தின் தலை சிறந்த அரபிக் கல்லூரியான லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியின் நிறுவனர் – நம்மை விட்டும் மறைந்து விட்ட மவ்லானா அமானீ ஹஸ்ரத் அவர்களின் பெயரால் முஸ்லிம் கலைச் செல்வர்களுக்கு விருதுகளையும், பொற்கிழிகளையும் வழங்கிப் பாராட்டிக் கொண்டிருக்கிறோம். அந்தப் பட்டியலில் திருச்சி ஜாமிஆ அன்வாருல் உலூம் அரபிக்கல்லூரியை உருவாக்கிய
ஸ்தாபகர் மவ்லானா அப்துஸ் ஸலாம் ஹஸ்ரத் அவர்களின் பெயரையும் சேர்க்க வேண்டுமென இக்கல்லூரி தற்போது முதல்வர் மவ்லவி முஃப்தி முஹம்மது ரூஹூல் ஹக் ரஷாதி, முஃப்தி உமர் ஃபாரூக் மழாஹிரி ஆகியோர் வேண்டுகோள் வைத்திருக்கிறார். இந்தக் கல்லூரி உருவாகக் காரணமாக இருந்த அந்தப் பெருந்தகை பெயரில் விருது வழங்க வேண்டும் என்பது ஒரு சரியான கோரிக்கைதான்.
நிகழ்ச்சியில் அரபிக்கல்லூரி பேராசிரியர்கள் திருச்சி ராஜா ஹோட்டல் உரிமையாளர் ஹாஜி கமால் முஸ்தபா, திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது, ஜமால் முஹம்மது கல்லூரி பேராசிரியர் சிராஜுதின், திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர் முஃப்தி உமர் பாரூக் மழாஹிரி, காஜா நகர் பிரைமரி தலைவர் கே.எம்.கே. ஹபீபுர் ரஹ்மான், வார்டு செயலாளர் ஆரிப் மற்றும் அரபிக்கல்லூரி மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள். இறுதியில் அரபிக்கல்லூரி பேராசிரியர் மவ்லவி எஸ். முஹம்மது அய்யூப் அன்வாரி நன்றி கூறினார்.