திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இலவச தொழிற்பயிற்சி முகாம் தொடக்கம்
திருச்சி ,
திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்த போலீஸ் கமிஷனர்: சிதிலமடைந்த சுற்றுச்சுவர் புதிதாக கட்டி தரப்பட்டது
திருச்சி ஏர்போர்ட் அருகே உள்ள கொட்டப்பட்டு பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த முகாமிற்கு கடந்த மாதம் ஜூலை 1ம் தேதி சென்ற மாநகர கமிஷனர் அருண், அங்கு வசித்து வரும் இலங்கை தமிழர்களிடம் கலந்துரையாடினார். மேலும், அவர்களிடம் இங்கு என்னென்ன குறைகள் உள்ளது, குறைகளை கூறுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினார்.
இதையடுத்து மருத்துவ முகாம், சொந்த ஊரில் உள்ள சொத்துக்களை கோருவது, குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்கள், தொழில் பயிற்சி, முகாமில் உள்ள சுற்றுச்சுவர் சேதமாகி பல ஆண்டுகள் ஆகியும் அதனை சரிசெய்யாததால் அந்நியர்கள் உள்ளே புகுந்து வருவதால் பாதுகாப்பு அச்சம் உள்ளதாக தெரிவித்தனர்.
அதை தொடர்ந்து ஜூலை 19ம் தேதி கொட்டப்பட்டு அகதிகள் முகாம் மற்றும் சிறப்பு முகாமில் உள்ள சிறைவாசிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. ஜூலை 22ம் தேதி அகதிகள் முகாமில், போலீஸ் கிளப் துவங்கி வைக்கப்பட்டது. இந்த கிளப்பில் குழந்தைகளுக்கான புத்தகங்கள், பல்வேறு விளையாட்டு பொருட்கள் வைக்கப்பட்டது. ஜூலை 26ம் தேதி இலவச சட்டப்பணிகள் குழு மூலம் தங்களது தாய் நாட்டில் உள்ள சொத்துகளை திரும்ப பெறுவதற்கான முகாம்வாசிகளுக்கு சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த 2ம் தேதி அரசு மறுவாழ்வுத்துறை மற்றும் பெர்ல் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இலவச தொழிற்பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இந்த பயிற்சி முகாமில் தையல், தட்டச்சு மற்றும் கணினி பயிற்சிகள் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில், சிதிலமடைந்த சுற்றுச்சுவர் புதிதாக கட்டி தரப்பட்டது.
முகாம் மக்களின் பாதுகாப்பு கருதி அந்த பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்த கமிஷனர் அருண் உத்தரவிட்டார். அதன்படி அதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. குறைகளை கூறி சில நாட்களிலேயே அனைத்து குறைகளை நிறைவேற்றிய போலீஸ் கமிஷனரை முகாம்வாசிகள் பாராட்டி நன்றி தெரிவித்தனர். கே.எம்.ஷாகுல்ஹமித்