தமிழகத்தில், 3,564 குழந்தைகள் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் திருச்சி மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுப்பரமணி தகவல்
திருச்சி,
தமிழகத்தில், 3,564 குழந்தைகள் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்,” என்று திருச்சி மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுப்பிரமணி தெரிவித்தார்.
திருச்சி மாவட்ட சுகாதாரத் துறை மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து, பள்ளி சிறார் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு இருதய நோய் கண்டறியும் முகாம் நடத்தியது. திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த முகாமை, கலெக்டர் சிவராசு, முகாமைத் தொடங்கி வைத்தார். முகாமில், 50க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பரிசோதனை செய்ததில், 20 குழந்தைகளுக்கு இதய நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், அவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. முகாமில், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சுப்பிரமணி கூறியதாவது: தமிழகத்தில், 2015ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம், ஆரம்பத்திலேயே, குழந்தைகளுக்கு இதய நோயை கண்டறிந்து, சிகிச்சை அளிக்கப்படுகிறது.இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை, 3,564 குழந்தைகளுக்கு இதய நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அதில், 2,076 பேருக்கு, மருந்து, மாத்திரைகள் கொடுத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. 1,488 பேர் ஆபரேஷன் செய்ய பரிந்துரை செய்யப்பட்டதில், 1,452 பேருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 36 பேருக்கு விரைவில் அறுவை சிகிச்சை செய்யப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.