தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் ‘பாங்க் ஆப் தமிழ்நாடு’ துவங்கப்படும் புதுக்கோட்டையில் எம்.எம். அப்துல்லா எம்.பி., பேட்டி
திருச்சி,
”தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள், ‘பாங்க் ஆப் தமிழ்நாடு’ துவங்கப்பட உள்ளது,” என மாநிலங்களவை உறுப்பினர் புதுக்கோட்டை எம்.எம். அப்துல்லா தெரிவித்தார்.
ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட அப்துல்லா, புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க., அலுவலகத்திற்கு வந்தார். அங்கு கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, தி.மு.க., நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்துல்லா கூறியதாவது: பார்லிமென்டில் எந்த விஷயத்தை கையில் எடுக்க வேண்டும், எப்படி செயலாற்ற வேண்டும் என, கட்சித் தலைமை உத்தரவிடுகிறதோ, அது என்னுடைய குரலாக எதிரொலிக்கும்.
வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக ஒரு தனித் துறையை உருவாக்குவோம் என, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியதை செயல்படுத்துவதற்கான குரலாக இருக்கும். வெளிநாடு வாழ் தமிழர்களின் பிரச்னைகளை மத்திய அரசின் வாயிலாக தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன். பாங்க் ஆப் தமிழ்நாடு குறித்து இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் பாங்க் ஆப் தமிழ்நாடு துவங்கப்படும். அதற்கு முன், ‘பேமென்ட் பாங்க்’ விரைவில் துவங்கப்பட உள்ளது. இந்த வங்கியில், தமிழக அரசு தான் பங்குதாரராக இருக்கும். இது ஒரு, ‘ஷெட்யூல்டு பாங்க்’. மற்ற வங்கிகளில் முதலீடு செய்யும் தமிழர்கள், ‘பாங்க் ஆப் தமிழ்நாடு’ வங்கியில் முதலீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.