திருச்சியில் இருந்து தஞ்சாவூர் வழியாக திருவாரூர் செல்லும் வழியில் மன்னார்குடி அருகே செருமங்கலத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்குள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென நுழைந்து ஆய்வு செய்தார்.
திருச்சி,
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் பச்சிளம் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவுக்கான கட்டிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. எழுபதாயிரம் சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் 7.7.2021 அன்று திறந்து வைப்பதற்காக மாலை திருச்சி வந்து அங்கிருந்து தஞ்சாவூர் வழியாக கார் மூலம் திருவாரூர் செல்கிறார்.
தமிழக முதல்வர் திருச்சியில் இருந்து தஞ்சாவூர் வழியாக திருவாரூர் சென்றுகொண்டிருந்தார். அப்போது செருமங்கலத்தில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையத்திற்குள் திடிரென நுழைந்த முதல்வர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாரம்பரிய நெல் விதைகளை பாதுகாக்க மாவட்டம் தோறும் வங்கி உருவாக்க வேண்டும். வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் கல்லூரியை உருவாக்க வேண்டும். சத்துணவு மூலம் பாரம்பரிய நெல் உணவுகளை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகளை, நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜு மனுவாக எழுதி தமிழக முதல்வரிடம் கொடுத்தார்.
அடுத்து, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும்போது நெல் மூட்டை ஒன்றுக்கு சுமார் 35 ரூபாய் வசூலிக்கப்படுவது குறித்து விவசாயிகள் முதல்வரிடம் புகார் கொடுத்தனர். இதுகுறித்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் சுமைப்பணி தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினார்.
தமிழக முதல்வர் திடீர் ஆய்வு செய்வது குறித்த தகவல் அறிந்தவுடன் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் குவிந்தனர். தங்கள் கிராமத்திற்கு தாய் சேய் நல விடுதி கட்டித் தரவேண்டும். கால்நடை மருத்துவமனை கட்டி தரவேண்டும். ஏரி, குளங்களை தூர்வார வேண்டும் என்ற கோரிக்கைகளை தமிழக முதல்வரிடம் முன்வைத்தனர்.
விவசாயிகளது கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து, அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என தமிழக முதல்வர் உறுதி அளித்து சென்றார். பின்னர் சாலையின் இருபுறமும் திரண்ட ஆயிரக்கணக்கான மக்களை பார்த்து முதல்வர் தனது வாகனத்தில் அமர்ந்தவாரு கையசைத்து வணங்கினார். அவரிடம் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள். ஷாகுல்ஹமித்