டோக்யோ ஒலிம்பிக்கில் இந்திய வீரர்களின் தகுதி நிலை
டோக்யோ ஒலிம்பிக்கில் மகளிர் குத்துசண்டை போட்டியில் 51 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் டொமினிகாவின் மிக்குவேலினா ஹெமாண்டெஸை வீழ்த்தி இந்தியாவின் மேரி கோம் வெற்றி பெற்றுள்ளார்.
முதல் சுற்றில் 4-1 என்ற கணக்கில் வென்றதன் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்தியாவின் மேரி கோம் தகுதி பெற்றுள்ளார்.
கொலம்பியாவின் வெலேனிகா விக்டோரியாவை வரும் 29ஆம் தேதி மேரி கோம் எதிர்கொள்ளவிருக்கிறார்.
38 வயதாகும் மேரி கோம், ஆறு முறை உலக சாம்பியன் பட்டத்தை பெற்றவர். அதுமட்டுமின்றி 2012இல் நடந்த லண்டன் ஒலிம்பிக்கிலும் அவர் தங்கம் வென்றார்.
முதல் சுற்று ஆட்டத்தில் அவர் வீழ்த்திய டொமினிகா வீரரும் 23 வயதானவருமான மிக்குவேலினா ஹெமாண்டெஸ், வளர்ந்து வரும் வீரராக அறியப்படுகிறார். 2019ஆம் ஆண்டில் இவர் அந்நாட்டுக்கு வெண்கல பதக்கம் பெற்றுத் தந்தார்.
மற்ற விளையாட்டுகள் நிலவரம் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் மனிகா பத்ரா இரண்டவாது சுற்றில் அசத்தலான வெற்றியை தன்வசமாக்கினார்.
இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் மற்றும் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற வீராங்கனை பி.வி. சிந்து, ஒற்றையர் குரூப் சுற்றில் இஸ்ரேலின் க்செனியா பொலிகார்போவாவை 21-7, 21-10 என்ற கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் மனிகா பத்ரா வெற்றி பெற்றுள்ளார். உக்ரைன் வீராங்கனை மார்கரைட்டாவை 4-3 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி, மனிகா பத்ரா வெற்றியடைந்துள்ளார்.
டென்னிஸ் முதல் சுற்று மகளிர் இரட்டையர் ஆட்டத்தில் சானியா மிர்ஸாவும், அங்கிதா ரெய்னாவும் யுக்ரேனின் கிச்நொக் இரட்டையர்களிடம் தோல்வி அடைந்தனர்.
இந்திய துப்பாக்கி சுடும் வீரர்கள் தீபக் குமார், திவ்யான்ஷ் சிங் பன்வார் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் ஆடவர் இறுதி போட்டிக்குள் நுழைய தகுதி பெறவில்லை. ஜப்பானின் அசாகா துப்பாக்கி சுடுதல் மையத்தில் நடைபெற்ற போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதி ஆட்டத்தில் பங்கேற்க இந்தியாவை சேர்ந்த மனு பாக்கர், யஷாஸ்வினி தேஸ்வால் தகுதி பெறவில்லை. ஆடவர் லைட் வெயிட் இரட்டையர் துடுப்பு படகு போட்டியில், இந்தியாவின் அர்ஜுன், அர்விந்த் 3-வது இடம் பிடித்து அரையிறுதிக்கு தேர்வானார்.
ஆடவருக்கான டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த சதயன் ஞானசேகரன் இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்தார். இந்திய ஹாக்கி அணி இன்று 1-7 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்தது