சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் இந்தியாவில் உள்ள வெளிநாட்டினருக்கு 30-ந் தேதிவரை விசா நீட்டிப்பு மத்திய அரசு அறிவிப்பு
திருச்சி,
சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் இந்தியாவில் உள்ள வெளிநாட்டினருக்கு 30-ந் தேதிவரை விசா நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்பு பல்வேறு வகை விசாக்களில் இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டினர், சர்வதேச விமான சேவை ரத்தானதால் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் உள்ளனர். அவர்களுக்கு அபராதம் எதுவும் விதிக்காமல், அவர்களது விசா காலத்தை இலவசமாக மத்திய அரசு நீட்டித்து வருகிறது. அந்த வகையில் ஆகஸ்டு 31-ந் தேதியுடன் விசா நீட்டிப்பு காலம் முடிந்த நிலையில், விசாவை இம்மாதம் 30-ந் தேதிவரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதனால், அத்தகைய வெளிநாட்டினர் விசா நீட்டிப்புக்காக விண்ணப்பிக்க தேவையில்லை என்று மத்திய உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். ஒருவேளை, செப்டம்பர் 30-ந் தேதிக்கு பிறகும் விசாவை நீட்டிக்க விரும்புபவர்கள், அதற்காக ஆன்லைனில் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால், தகுதி அடிப்படையில் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் கூறினார். எம்.கே. ஷாகுல் ஹமீது