செய்யது அம்மாள் அறக்கட்டளை கல்வி உதவி மற்றும் வழிகாட்டி மையம் தொடக்கம்.
ஜுலை,25-
இராமநாதபுரம் செய்யது அம்மாள் அறக்கட்டளை மூலம் கல்வி உதவி மற்றும் வழிகாட்டி மையம் தொடங்கப்பட்டது. செய்யது அம்மாள் கல்வி உதவி மற்றும் வழிகாட்டி மையத்தை செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப்பினர் செல்லதுரை அப்துல்லா திறந்து வைத்தார். இது குறித்து செய்யது அம்மாள் பொறியியற் கல்லூரி தாளாளர் டாக்டர். சின்னதுரை அப்துல்லா கூறியதாவது “கடந்த 65 ஆண்டுகளுக்கு மேலாக இராமநாத புரத்தில் டாக்டர். இ.எம். அப்துல்லா அவர்களால் நிறுவப்பட்ட செய்யது அம்மாள் அறக்கட்டளை கல்வி, மருத்துவம் மற்றும் இயற்கை சார்ந்த சேவைகளை ஆற்றி வருகிறது. இதன் நீட்சியாக, செய்யது அம்மாள் அறக்கட்டளை இந்த ஆண்டு முதல் ஆரம்பக்கல்வி மற்றும் உயர் கல்விக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளது. இக்கல்வி உதவித் தொகை அனைத்து சமுதாய மக்களுக்கும் வழங்கப்படும். உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்களின் பெற்றோரின் ஒட்டு மொத்த ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்.
பள்ளிகள் மற்றும் உயர்கல்வி பிரிவுகளான கலை, அறிவியல், பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்பை படிக்க விருப்பம் உள்ளவர்களுக்கு செய்யது அம்மாள் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் படிக்க மட்டுமே சலுகைகள் வழங்கப் படும். மற்ற தனியார் பள்ளிகளுக்கோ அல்லது தனியார் கல்லூரிகளில் படிப்பவர் களுக்கோ இந்த உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது. மேலும், மருத்துவம், வேளாண்மை மற்றும் சட்டம் பயில விரும்புபவர்கள் அரசு கல்லூரிகளில் சேர்ந்தால் அவர்களுக்கு நிதி உதவி அளிக்கப்படும்.
அதிகபட்சமாக, பள்ளி மாணவர்களுக்கு ரூ.5000, கலை மற்றும் அறிவியல் பயிலும் மாணவர்களுக்கு ரூ.10,000 , பொறியியல், மருத்துவம், வேளாண்மை மற்றும் சட்டம் பயிலும் மாணவர்களுக்கு ரூ.20,000 ஆண்டுதோறும் வழங்கப்படும்.
சம்பந்தப்பட்டவர்களின் கல்விக் கட்டணத்தை நேரடியாக கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக அல்லது மற்ற பண பரிவர்த்தனை மூலமாக செலுத்தப்படும். மேலும் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் கலந்தாய்வின் மூலம் சேரும் தகுதி வாய்ந்த முதல் பட்டதாரி மாணவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு கல்வி கட்டணம் முழுவதும் இலவசமாகவும், மற்றும் SC/ST பிரிவு மாணவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு கல்வி, பேருந்து, தங்குமிடம் மற்றும் உணவு கட்டணங்களை இலவசமாகவும் வழங்கப்படும்.
மேற்கூறிய இச்சலுகையை பெறுவதற்கு விண்ணப்பங்களை ராசி ஸ்கேன்ஸ் 2 வது தளத்தில் உள்ள மையத்தில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக் கொள்ளலாம்.”என்றார். நிகழ்ச்சியில் அறக்கட்டளை உறுப்பினர்கள், செய்யது அம்மாள் கல்விக்குழுமங்களின் முதல்வர்கள் மற்றும் துறைத்தலைவர்கள் கலந்து கொண்டனர். எம்.சோமசுந்தரம்