காரைக்கால் மாவட்டத்தில் திருடு போன 21 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு
புதுவை,
காரைக்கால் மாவட்டத்தில் காணாமல் போன 21 செல்போன்கள் போலீசாரால் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.திருடு போனவைகாரைக்கால் மாவட்ட அனைத்து போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில், செல்போன்கள் அடிக்கடி காணாமலும், திருடப்பட்டும் வந்தது. இது தொடர்பான புகார்களின் அடிப்படையில் போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை போலீசார் தேடிவந்தனர். இந்தநிலையில், சைபர் பிரிவு போலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப் பிரிவு போலீசார் உதவியுடன் இந்த செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களில் ரூ.3 லட்சத்து 56 ஆயிரத்து 500 மதிப்பிலான, 21 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகாரிக்காபட் செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். நிகழ்ச்சியில், போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லபன், சிறப்பு அதிரடிப்பிரிவு சப்.இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் மற்றும் சிறப்பு அதிரடி மற்றும் சைபர் பிரிவு போலீசார் கலந்துகொண்டனர். செல்போன்களை பெற்றுக்கொண்ட பயனாளிகள் போலீசாரின் சிறப்பான பணியை பாராட்டிச் சென்றனர். கஞ்சா வேட்டைமுடிவில், காரைக்கால் மாவட்டத்தில் அண்மைக்காலமாக கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவது குறித்து, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகாரிக்காபட் கூறியதாவது:- காரைக்கால் மாவட்டம் முழுவதும் அனைத்து போலீசாரும் தீவிர கஞ்சா வேட்டையில் இறங்கியுள்ளனர். அந்தவகையில், கடந்த ஆண்டை காட்டிலும், கஞ்சா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வழக்குகள் இந்த ஆண்டு அதிகமாக போடப்பட்டு, குற்றவாளிகள் உடனுக்குடன் கைது செய்யப்பட்டு வருகின்றனர். போலீசார் பற்றாக்குறை பிரச்சினை தீர்ந்தால் இன்னும் நடவடிக்கை வேகமாக இருக்கும். பொதுமக்களும், கஞ்சா உள்ளிட்ட குற்ற சம்பவங்களை காண நேரிட்டால், அருகில் உள்ள போலீஸ் நிலையத்திலோ அல்லது போலீஸ் புகார் பெட்டியிலோ, போலீஸ் வாட்ஸ் அப் எண்ணிலோ உடனே தொடர்பு கொள்ளலாம். அவர்களை பற்றிய விவரம் ரகசியம் காக்கப்பட்டு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்றார்.