கவிஞர் புலமைப்பித்தன் சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
திருச்சி
‘நீங்க நல்ல இருக்கனும் நாடு முன்னேற’என்ற பாடல் வரிகளை எழுதிய கவிஞர் புலமைப்பித்தன் திராவிடக் கொள்கைகளின் மேல் பற்றுகொண்டவர், எம்.ஜி.ஆருக்கு பக்கத்துணையாய் விளங்கியவர்
கவிஞர் புலமைப்பித்தன் சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார். வயது முதிர்வால் (86) உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உயிர் நேற்று காலை 9.33 மணிக்கு பிரிந்தது. கவிஞர் புலமைப்பித்தன் 4 முறை தமிழ்நாடு அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது பெற்றுள்ளார். 1935ல் கோவையில் பிறந்த புலமைப்பித்தன் 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். ராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட இவர், தமிழின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக தனது பெயரை புலமைப்பித்தன் என்று மாற்றிக் கொண்டார்.
சாந்தோம் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகவும் இவர் பணிபுரிந்தார். முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.-ன் நெருங்கிய நண்பர் புலமைப்பித்தன். எம்.ஜி.ஆர். நடித்த பல படங்களுக்கு இவர் பாடல்கள் எழுதியுள்ளார். குடியிருந்த கோயில் திரைப்படத்தில் இடம்பெற்ற நான் யார், நான் யார், நீ யார்? என்ற பாடலின் மூலம் புலமைப்பித்தன் புகழ் பெற்றவர். இதயக்கனி திரைப்படத்தில் நீங்க நல்ல இருக்கனும் நாடு முன்னேற என்ற பாடலையும் இவர் எழுதியுள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் இடம் பெற்ற தாய்மை பாடலையும் புலமைப்பித்தன் எழுதியிருக்கிறார். அதிமுக அவைத்தலைவர் பதவியும் புலமைப்பித்தன் வகித்துள்ளார். மேலும் தமிழக சட்டமன்ற மேலவை துணை தலைவராகவும் இவர் இருந்துள்ளார். முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு பல்வேறு பாடல்களை எழுதிப் புகழ் பெற்றவர் கவிஞர் புலமை பித்தன். புலமைப்பித்தன். 2015ம் ஆண்டில் வடிவேலு நடித்த எலி படத்திற்காக தனது கடைசி பாடலை எழுதியிருந்தார்.

இந்த நிலையில் புலமைப்பித்தனின் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அ.தி.மு.க.வின் முன்னாள் அவைத் தலைவரும், கவிஞருமான புலமைப்பித்தன் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக மறைவுற்றார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன். திராவிடக் கொள்கை களின் மேல் பற்றுகொண்டு, அரசியலில் தீவிரமாக இயங்கிய அவர், எம்.ஜி.ஆர். அவர்களுக்கு பக்கத் துணையாய் விளங்கியவர். அவர் சட்ட மேலவை துணைத் தலைவராகப் பணியாற்றியவர் என்பதும் தமிழ்நாடு அரசின் பெரியார் விருதினைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வயது மூப்பின் காரணமாக மறைந்த அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அ.தி.மு.க. தோழர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,எனத் தெரிவித்தார்.
இவரது மறைவிற்கு .தி.மு.க. ஓருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஓருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன், தமாகா தலைவர் ஜி.கே. வாசன் மூத்த தலைவர்கள், திரைப்பட துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். . எம் கே. ஷாகுல் ஹமீது