கர்நாடகா முதல்வர் பதவியில் இன்று மாலை விலகுகிறார் எடியூரப்பா
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விலகப்போவதாக பி.எஸ். எடியூரப்பா அறிவித்துள்ளார். அரசின் இரண்டாம் ஆண்டு நிறைவு நாள் கொண்டாடப்படட்ட நிகழ்வில் இதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
பெங்களூருவில் உள்ள விதான் செளதா சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய எடியூரப்பா, “முதல்வர் பதவியில் நான் விலகுவது துயரத்தால் அல்ல, இதை மகிழ்ச்சியாகவே செய்கிறேன்,” என்றார்.
“மாநிலத்தில் சேவையாற்ற எனக்கு வாய்ப்பு அளித்த பிரதமர் நரேந்திர மோதிக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் விருப்பம் மற்றும் பிறரின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் விதமாக கட்சிக்காக உழைப்பேன்,” என்று எடியூரப்பா உணர்ச்சிபொங்க பேசினார்.
இந்த நிலையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் அவர் தமது முதல்வர் பதவியில் இருந்து முறைப்படி விலகுவார் என்று கர்நாடகா பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. மாநிலத்தில் வாரிசு அரசியலை ஊக்குவிக்கும் விதமாக தமது மகன் விஜயேந்திராவை துணை முதல்வராக்க எடியூரப்பா முயல்வதாகவும் மாநிலத்தில் அவரது குடும்பம் அரசு விவகாரங்களில் தலையிடுவது அதிகரித்துள்ளதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் தீவிரமாக இருந்தன. புவிபாலாஜி