” கடல்சார் தொல்லியல் ஆய்வு” பெரிய செயல் திட்டத்தை கையிலெடுக்கும் தமிழ்நாடு அரசு. மீளும் 3000 ஆண்டு வரலாறு
சிவகங்கை ,
தமிழ்நாட்டில் கீழடியில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கும் முடிவை அரசு எடுத்து இருக்கும் நிலையில். இன்னொரு முக்கியமான தொல்லியல் ஆராய்ச்சியை மேற்கொள்ளும் முடிவையும் அரசு எடுத்து உள்ளது. மதுரை மாவட்டத்திற்கு தென்கிழக்கில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் யூனியனின் கீழடி ஊராட்சியில், மத்திய அரசு மற்றும் மாநில அரசின் சார்பில் 6 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடத்தப்பட்டுள்ளன. ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று வருகிறது .கீழடியின் பூமியில் தோண்டத் தோண்ட நமது முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள் கிடைத்த வண்ணம் உள்ளன.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணிகளை தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகிய இருவரும் இன்று ஆய்வு செய்தனர். தொல்லியல் துறை அமைச்சராக பொறுபேற்ற பிறகு தங்கம் தென்னரசு முதன் முறையாக கீழடிக்கு வந்து ஆய்வு மேற்கொள் கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இங்கு உலகத்தரத்திலான அருங்காட்சியகம் அமைக்கப்படும். சர்வதேச தரத்தில் பல்வேறு வசதிகளுடன் கூடிய அருங்காட்சியகம் அமைக்கப் படும் என்று தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் கீழடி போலவே தமிழ்நாடு முழுக்க பல்வேறு கடல் பகுதிகளில் பல்வேறு வரலாற்று எச்சங்கள் ஆராய்ச்சி செய்யப்படாமல் உள்ளன.
கீழடி என்று ஒரு இடத்திலேயே 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று பொருட்கள் கிடைக்கும் போது, கடலுக்கு உள்ளே இதை விட பழமையான வரலாற்று சான்றுகள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன என்று வரலாற்று ஆராய்ச்சி யாளர்கள் கூறி வருகிறார்கள். இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாடு அரசு விரைவில் கடல்சார் தொல்லியல் ஆராய்ச்சியை கையில் எடுக்க உள்ளது.
கீழடி தமிழர்களின் தொல்லியல் வரலாற்றுக்கு கீழடி ஒரு சான்று. ஆனால் இது மிகப்பெரிய சோற்று பானையின் சின்ன பருக்கைதான். இன்னும் பல வரலாற்று பின்னணிகளை பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடிக்க முடியும் என்பதால் கடல்சார் தொல்லியல் ஆராய்ச்சியை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள உள்ளது. ஆனால் இந்த ஆராய்ச்சி அவ்வளவு எளிதானது கிடையாது.
இது மிகவும் சவாலான காரியம். வங்க கடல் பகுதிகளில் தொல்லியல் ஆராய்ச்சி மேற்கொள் வதன் மூலம் தமிழ்நாடு மக்கள் 2600 வருடங்களுக்கு முன்பு மேற்கொண்ட கடல் சார் வர்த்தகம், கடல்சார் பயணங்கள் குறித்த உண்மைகள், வரலாற்று கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படும். இதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு ஆய்வு செய்து வருகிறது. ஏற்கனவே விரைவில் பணிகள் தொடங்கப்பட வேண்டும் என்று தகவல்கள் வருகின்றன. ஏற்கனவே ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் பகுதியில் தொல்லியல் ஆராய்ச்சி கடற்கரைக்கு அருகே நடத்தப்பட்டு வருகிறது. கடல் கரையில், சிறிய அளவிலான குழிகள் தோண்டப்பட்டு ஆராய்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது. இதேபோல் மற்ற வங்க கடல் பகுதியிலும் விரைவில் ஆராய்ச்சியை தொடங்க உள்ளனர்.
பெரிய செயல் திட்டத்தை கைலெடுப்பதன் மூலமாகத் தமிழ்நாட்டின் தொல்லியல் ஆராய்ச்சியில் இது மிகப்பெரிய பெரிய செயல்திட்டமாக இருக்கும். இதற்கான ஆலோசனைகள் மட்டுமே தற்போது நடத்து வருகின்றன. விரைவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, வங்காள கரையோரம் பல்வேறு கரைகளில், கடலுக்கு உள்ளேயும் ஆராய்ச்சிகள் தொடங்கப்படும் என்கிறார்கள். மேலும், டிசம்பர் 12 -2020 தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லுார், சிவகளை, கொடுமணல் உட்பட பல இடங்களில் அகழாய்வு நடத்த மத்திய தொல்லியல்துறை அனுமதியளிப்பது எப்போது என்பதை தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சிவகளையில் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும். மதுரை மாவட்ட சமணர் படுகை உள்ளிட்ட மாநிலத்தில் தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க வேண்டும். தொல்லியல் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கி, காலிப்பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும் என பல்வேறு மனுக்கள் தாக்கலாகின.
நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு டிசம்பர் 12 -2020 அன்று உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. அதில் தொல்லியல் சின்னங்களை பராமரிக்க 50 பாதுகாவலர்கள் நியமனம் தொடர்பாக தமிழக அரசு டிச.,17 க்குள் முடிவெடுக்க வேண்டும். அவர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்க பரிசீலிக்க வேண்டும்.உடையளூர் ஆய்வு குறித்து பாரதிதாசன் பல்கலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
மகாபலிபுரத்தில் 2003-04ல் கடலுக்கடியில் மத்திய தொல்லியல்துறை சார்பில் அலோக் திரிபாதி அகழாய்வு மேற்கொண்டார். இதன் முடிவு எப்போது வெளியிடப்படும் என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்.
பூம்புகாரில் 1968ல் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுப்படி, அது கி.மு., 9ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் கடல்சார் அறிவியல் மற்றும் கடல் புவிசார் தொழில் நுட்பத்துறைகள் உள்ளன. இவை குமரிக் கண்டம் தொடர்பாக கடல் அகழாய்வு மேற்கொள்ள சாத்தியக்கூறு உள்ளதா என்பதற்கு துவக்க கட்ட ஆய்வு செய்ய கட்டமைப்பு வசதிகள் உள்ளதா என்பதை பல்கலை தெரிவிக்க வேண்டும் ஆராச்சியாளர்கள், வரலாற்றா ளர்கள், ஆய்வு மாணவர்கள் போன்றவர்கள் கடந்தகால ஆட்சியில் நிறை வேற்றத் தவறிய திட்டங்களையும் நீதிமன்றங்களின் முந்தைய ஆணைகளையும் நிறேவேற்றுவதற்கு முன்வரவேண்டும் என்று கோரிக்கை எழுப்புகின்றனர். புவி.பாலாஜி