இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு ரூ. 4000 வழங்கியமைக்கு
இலங்கை மூத்த பத்திரிகையாளர் எம்.ஏ.எம்.நிலாம் முதலமைச்சரின் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டு.
கொழும்பு; தமிழகத்தில் அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு வாழ்வாதார கொடுப்பனவாக ரூ 4000 வழங்கியமைக்கு இலங்கை மூத்த பத்திரிகையாளர் எம்.ஏ.எம். நிலாம் முதலமைச்சரின் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தார்.
இதுகுறித்து இலங்கை முஸ்லிம் மீடியா போரம் துணைத் தலைவரும் மூத்த பத்திரிகையாளரும் கவிஞருமான கலாபூஷணம் ஹாஜி எம்.ஏ.எம். நிலாம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது : தமிழகத்தில் அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு தமிழக அரசு வாழ்வாதார கொடுப்பனவாக ரூ 4000 வழங்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தமிழ் பேசும் மக்கள் சார்பில் மனமுவந்த நன்றிகளை தெரிவித்திருக்கின்றார்.
பெரிய பொருளாதார நெருக்கடிக்குள் காலத்தை கடத்தி வரும் ஈழத்து தமிழ் அகதிகள் விடயத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் காட்டியுள்ள அக்கறை மெச்சத்தக்கதாக உள்ளது. இன மத வேறுபாடுகளை கடந்து தமிழக அரசு ஆட்சி பீடமேறிய குறுகிய காலத்துக்குள் மேற்கொண்டு வரும் மக்கள் நல செயற்பாடுகள் பாராட்டுக்குரியதாகும்.
அகதிகள் முகாம்களில் வாழும் மக்களது வாழ்வாதார பிரச்சினை தொடர்பில் முதலமைச்சர் கொண்டிருக்கும் சிரத்தை விதந்துரைக்கபட வேண்டிய தொன்றாகும். முகாம்களுக்குள் இருக்கும் அகதிகளுக்கும் முகாம்களுக்கு வெளியேயுள்ள அகதிகளுக்கும் நிவாரணம் வழங்க எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையானது முதலமைச்சரின் ஸ்டாலினின் சிறப்பானதொரு முன்மாதிரியாகும். கலைஞர் வழி செல்லும் தனயன் என்பதை அவர் நிரூபித்துக் காட்டும் ஒரு பண்பாக இதனை நாம் பார்க்கின்றோம்.
சிறுபான்மை மக்கள் விஷயத்தில் தமிழக அரசு முதல்வரும் காட்டும் அக்கரையானது இந்த மக்களின் நாளைய விடியலுக்கான அத்திவாரமாகவே நாம் பார்க்கின்றோம் எனவும் பத்திரிகையாளர் கலாபூஷணம் எம்.ஏ.எம். நிலாம் குறிப்பிட்டுள்ளார்.
ஷாஹுல் ஹமீது.