இராமேஸ்வரத்தில் பிரசாத் திட்டம் மூலம் ரூ .50 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் – அரசு முதன்மை செயலாளர் டாக்டர் சந்திரமோகன் தகவல்!
இராமநாதபுரம், ஜுலை,26,
இராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இந்திய சுற்றுலா துறை அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா துறை இணைந்து பிரசாத் திட்டம் மூலம் ரூபாய் 50 கோடி மதிப்பிலான சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என இராமநாதபுரம் மாவட்டம் வருகை தந்த சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் சந்திரமோகன் தெரிவித்தார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரம் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த புனித தலமாக விளங்குகிறது . இந்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் , புது டெல்லி மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இணைந்து இராமேஸ்வரத்தில் ” பிரசாத் திட்டம் ” மூலம் ரூ .50 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன . இது தொடர்பாக முதற்கட்ட ஆலோசனைக்கூட்டம் இராமேஸ்வரத்தில் நடந்தது. இதில் , இந்திய சுற்றுலாத்துறை அமைச்சக அதிகாரிகளான துணை செயலாளர்(சுற்றுலா) எஸ்.எஸ்.வர்மா , நிராஜ்பன் மகாஜன், மற்றும் தமிழ்நாடு சுற்றுலா , பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர்.பி.சந்திரமோகன், சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சி கழகம் மேலாண்மை இயக்குநருமான எஸ்.சந்தீப் நந்தூரி , மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா ஆகியோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து இராமேஸ்வரம் அக்கினித்தீர்த்த கடற்கரை , தனுஷ்கோடி , அரிச்சல்முனை . ஓலைகுடா கடற்கரை , அரியமான் கடற்கரை ஆகிய இடங்களை தல ஆய்வு செய்தனர். இராமேஸ்வரம் வருகை தரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நலனுக்காக இராமேஸ்வரம் திருக்கோயிலில் அமைந்துள்ள தீர்த்தங்களை மேம்பாடு செய்தல் , நடைபாதை அமைத்தல் , உடை மாற்றும் அறை அமைத்தல் , திருக்கோயில் முன்பு நுழைவு வாயில் அமைத்தல் , நீர்சாக சவிளையாட்டு மற்றும் ஹெலிபேட் ஆகியவை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் தொடர்பாக ஆலோசனை செய்த பின் தமிழக அரசு முதன்மை செயலாளர் டாக்டர்.பி.சந்திரமோகன் செய்தியாளர்களிடம் இராமேஸ்வரத்தில் சுற்றுலா மேம்படுத்திட மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஒருங்கிணைந்து 50 கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்திட திட்டமிடப்பட்டு உள்ளது.
அதனடிப்படையில் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன . பக்தர்கள் சிரமமின்றி கோவிலை சுற்றி வர நடைபாதைகள் மேம்படுத்தவும் , கோவில் கோபுரங்கள் மற்றும் வெறிப்புற பகுதியில் மின் கோபுர விளக்குகள் அதிகப்படுத்தி ஒளியூட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது . மேலும் , தண்ணீர் வசதி மற்றும் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் வாகனங்கள் பார்க்கிங் வசதி செய்து தருவதற்கும், கோவிலுக்கு வந்து செல்பவர்களுக்கு வசதியாக இருக்கும் வகையில் பேட்டரி கார், சிற்றுந்து வசதிகளை மேம்படுத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார். இந்த நிகழ்வில் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோவில் இணை ஆணையர் டாக்டர் தனபால் , உதவி காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபக் சிவாச் ,மாவட்ட சுற்றுலா அலுவலர் வெங்கடாசலபதி , நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் முருகன், நகராட்சி ஆணையர்(பொ) பா.சக்திவேல் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர். எம்.சோமசுந்தரம்.