இராமநாதபுரம் அருகே வைகை கால்வாயில் பாதாள சாக்கடை கழிவு நீர் – திருவாடானை எம்எல்ஏ கருமாணிக்கம் நேரில் ஆய்வு!
இராமநாதபுரம், அக்,4-
இராமநாதபுரம் நகராட்சி பாதாள சாக்கடை திட்டத்திற்காக அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் வைகையாற்று கால்வாயில் நேரடியாக கலப்பதால் வைகை கால்வாயில் 10 கி.மீ தூரம் கழிவுநீர் நீர் கலந்து அப்பகுதியின் அருகே உள்ள கிராமங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக திருவாடானை எம்எல்ஏ கருமாணிக்கம் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இராமநாதபுரம் நகராட்சியில் செயல்படுத்தப்படும் பாதாள சாக்கடை திட்டத்திற்கான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மாடக்கொட்டான் ஊராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சுத்திகரிப்பு நிலையம் மூலம் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு ஆற்றில் விட வேண்டும். ஆனால் இவை முறையாக சுத்திகரிப்பு செய்யப்படாமல் ஆற்றில் விடுவதால் புல்லங்குடியிலிருந்து நதிப்பாலம் வழியாக ஆற்றாங்கரை முகத்துவாரம் வழியாக கடலுக்கு செல்லும் வைகை ஆற்றுக்கால்வாய் முழுவதும் சுமார் 10 கிலோமீட்டர் அளவில் கழிவுநீர் தேங்கியுள்ளது.
இதனால் இந்த ஆற்றுக்காவ்வாய் அருகே உள்ள 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் பாதிப்பு அடைந்து துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி மக்கள் அவதிப்படுகின்றனர்.
மேலும் இந்த ஆற்றுப்படுகையில் உள்ள நீரை இப்பகுதியில் உள்ள ஆடு, மாடுகள் பருகுவதால் நோய் தொற்று ஏற்பட்டு கால்நடைகளின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பசு மாடுகளை அதிகளவில் வளர்த்து வருகின்றனர். அதன்மூலம் இராமநாதபுரம் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு இங்கிருந்து அதிகளவில் பால் சப்ளை செய்யப்படுகிறது. அந்த பால் மூலம் மக்களுக்கு சரும பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் நிலத்தடி நீரில் கழிவுநீர் கலப்பதால் இப்பகுதியில் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இப்பிரச்சனை குறித்து மாடக்கொட்டான் ஊராட்சி மன்ற தலைவர் யாஸ்மின், இராமநாதபுரம் வட்டார காங்கிரஸ் செயலாளர் முகமது அலி ஆகியோர் இராமநாதபுரம் வட்டார காங்கிரஸ் தலைவர் காருகுடி சேகர் மூலம் திருவாடானை எம்எல்ஏ விடம் முறையிட்டனர்.
அதனையொட்டி திருவாடானை எம்எல்ஏ கருமாணிக்கம் அந்த பகுதியில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம்,
வைகை ஆற்றுப்படுகையில் கழிவுநீர் கலப்பதால் இப்பகுதி முழுவதும் மாசு ஏற்பட்டுள்ளது. இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று முறையாக சுத்திகரிப்பு செய்து ராட்சத குழாய்கள் அமைத்து அதன் மூலம் கழிவுநீர் கொண்டு செல்ல திட்டம் தயார் செய்யப்படும் என்றார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட காங்கிரஸ் தலைவர் செல்லத்துரை அப்துல்லா, இராமநாதபுரம் வட்டார காங்கிரஸ் தலைவர் காருகுடி சேகர், இராமநாதபுரம் ஒன்றியக்குழு தலைவர் பிரபாகரன், மாடக் கொட்டான் ஊராட்சி மன்ற தலைவர் யாஸ்மின் பகுர்தீன், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர்கள் கோபால், பாலகிருஷ்ணன், வட்டார காங்கிரஸ் செயலாளர் முகமது அலி, ஒன்றிய கவுன்சிலர்கள் மனோகரன், கமர்தீன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் பாஸ்கரசேதுபதி, ஆறுமுகம், தேவிபட்டினம் அன்சாரி சேட், சித்தார் கோட்டை நவாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.