இராமநாதபுரம் அருகே வாக்காளர் பட்டியலில் முறைகேடு .. பாஜக நிர்வாகி புகார்
ஜுலை,18,
இராமநாதபுரம் அருகே உள்ள புத்தேந்தல் கிராமத்தில் உள்ள தனியார் மனநல காப்பகத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டவர்களின் பெயர்களில் போலியாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று வாக்காளர் அடையாள அட்டைகள் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி புத்தேந்தல் ஊராட்சி. இராமநாதபுரம் ஒன்றிய எல்லைக்குள் உள்ள இந்த ஊராட்சியில் தனியார் மனநல காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் ஏராளமான மனநோயாளிகள் தங்கி உள்ளனர். அவ்வாறு சிகிச்சைக்காக ஆண்டுக் கணக்கில் தங்கி உள்ள அவர்களுக்கு காப்பகத்தின் உரிமையாளர் புத்தேந்தல் ஊராட்சிக்குட் பட்ட வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயர்களை சேர்த்து அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சி யருக்கு புத்தேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் கோபிநாத் அளித்துள்ள மனுவில் எங்களது ஊராட்சியில் செஞ்சோலை மனநல காப்பகம் என்ற பெயரில் நாகேஸ்வரன் என்பவர் மனநல காப்பகம் நடத்தி வருகிறார். இதில் வெளியூரை சேர்ந்த ஏராளமான மனநோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். ஊராட்சிக்கு சிறிதும் சம்பந்தமில்லாத சிகிச்சை பெற்று வரும் சுமார் 90 பேருக்கு புத்தேந்தல் ஊராட்சிக்குட்பட்ட வாக்காளர் பட்டியலில் பெயரை எவ்வித முகவரிச்சான்றுமின்றி முறைகேடாக சேர்த்து அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை பெற்றுள்ளார். இது தேர்தல் சட்டத்திற்கு புறம்பாக உள்ளது. மேலும் சிகிச்சை முடிந்து குணமாகி சென்ற உடன் சிகிச்சைக்காக வரும் வேறு நபர்களை வைத்து வாக்களிக்க இது வகை செய்யும் என்பதால் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ள மனநோயாளிகள் 90 பேரையும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக ஒபிசி அணி மாநில செயலாளர் மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் எஸ்.முருகன், மனநோயாளிகள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளதில் முறைகேடு செய்துள்ளனர். எவ்வித முகவரிச்சான்றுமின்றி எப்படி சேர்த்தார்கள் என்று தெரிய வில்லை. இதை தேர்தல் அதிகாரிகள் உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில்பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும். மேலும் காப்பகத்தின் நம்பகத்தன்மை குறித்து அரசு அதிகாரிகள் உரிய விசாரணை செய்ய வேண்டும் என்றார். மாவட்ட பொதுச் செயலாளர் ஜி.குமார், மாவட்ட ஒபிசி அணி தலைவர் மாரிமுத்து, மாவட்ட ஊடக பிரிவு தலைவர் எஸ்.குமரன், மாவட்ட அரசு தொடர்பு தலைவர் வி.நடராஜன், நகர் பாஜக தலைவர் இராம.வீரபாகு, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் பரமேஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். எம்.சோமசுந்தரம்.