இராமநாதபுரம் அருகே கோவிலுக்கு பூட்டு போட்டதால்… இரும்பு கதவிற்கு மாலை அணிவித்து பொதுமக்கள் வழிபாடு
இராமநாதபுரம், செப்,15-
இராமநாதபுரம் அருகே உள்ள காளியம்மன் கோவிலில் வழிபாடு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் வருவாய் துறையினர் பூட்டு போட்டு பொதுமக்கள் வழிபாடு நடத்த அனுமதிக்காத சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கீழக்கரை வட்டம் திருப்புல்லாணி போலீஸ் சரகம் சங்கன்வலசை கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. அங்கு, சின்னாண்டிவலசை ஊராட்சிக்குட்பட்ட சங்கன்வலசை, மகுளிவலசை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்கள், வழிபாடு செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த உள்ளாட்சி தேர்தல் முன் விரோதம் காரணமாக இரு தரப்பினர் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. அதனையொட்டி இரு தரப்பினருக்கும் காளியம்மன் கோவிலில் வழிபாடு செய்வதில் பிரச்சினை எழுந்தது.
இந்த பிரச்சினை குறித்து விசாரித்த கீழக்கரை வட்டாட்சியர் தலைமையிலான வருவாய் துறையினர் இரு தரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பிலும் தலா இரண்டு பேர் வீதம் தேர்வு செய்து கோவிலில் வழிபாடு நடத்த குழு அமைத்தனர். இந்த நிலையில் செப்டம்பர் 14 ந்தேதி கிராம பொதுமக்கள் காளியம்மன் கோவிலில் பொங்கல் விழா நடத்த சின்னாண்டிவலசை ஊராட்சி மன்ற தலைவர் சஞ்சய் காந்தி மூலம் காவல் துறை மற்றும் வருவாய் துறையினரிடம் அனுமதி பெற்று விழாவிற்கு தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தனர். அப்போது அந்த பகுதி அதிமுக ஒன்றிய கவுன்சிலர் முனியாயி அவர்களின் கணவர் செவத்தான் என்ற வெள்ளையன் தரப்பினர் பொங்கல் விழா நடத்த எதிர்ப்பு தெரிவித்து கோவிலுக்கு பூட்டு போட்டனர். இதனையறிந்த திருப்புல்லாணி வருவாய் ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பூட்டை அகற்றி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் இருதரப்பிற்கும் இடையே உடன்பாடு ஏற்படாததால் வருவாய் துறையினர் கோவிலுக்கு பூட்டு போட்டு சீல் வைத்தனர்.
விழாவிற்கு ஏற்பாடுகளை செய்த பொதுமக்கள் வேறு வழியின்றி கோவிலுக்கு வெளியே உள்ள இரும்பு கதவில் அம்மனுக்கு அணிவிக்கும் பட்டு, சந்தனம் , மாலைகளை அணிவித்து பொங்கல் படைத்து சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வருவாய் துறையினர் பூட்டு போட்டு பொதுமக்களை வழிபாடு நடத்த அனுமதிக்காத சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் காரணமாக அந்த பகுதியில் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் கணவரின் இந்த செயல் அப்பகுதி பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.