இராமநாதபுரத்தில் ஹஜ் பெருநாளை யொட்டி பதிவு பெற்ற தமுமுக சார்பில் சிறப்பு தொழுகை
இராமநாதபுரம், ஜுலை, 21,
இராமநாதபுரம் நகர் பதிவு பெற்ற தமுமுக சார்பில் ஹஜ் பெருநாளை யொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இறைவன் கட்டளைக்காக மகனை பலியிடத்துணிந்த இப்றாகிம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக தியாகத்திருநாளாக உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஹஜ் பெருநாள்.
இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்றாஹீம். இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு, இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்தார். நெடுநாட்களாக, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு, இறுதியில் இவரின் இரண்டாவது மனைவி ஹாஜரா மூலம் ஓர் ஆண் மகவு பிறந்தது. இஸ்மாயீல் எனப் பெயரிடப்பட்ட அந்தக் குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய அராபியர்கள். இஸ்மாயீல், பால்யப் பருவத்தை எட்டியிருந்த பொழுது, அவரைத் தனக்குப் பலியிடுமாறு, கடவுள், இப்ராஹிம் அவர்களுக்குக் கனவின் மூலம் கட்டளையிட்டார். இதைப்பற்றி இஸ்மாயீலிடம் கூறிய இப்ராஹிம், அவரின் அனுமதியுடன் பலியிடத் துணிந்தபொழுது, ஜிப்ரயீல் எனப்படும் வானவரை அனுப்பி, இறைவன் அதைத் தடுத்தார். மேலும், ஓர் ஆட்டை இறக்கிவைத்த இறைவன், இஸ்மாயீலுக்குப் பதில் அந்த ஆட்டை அறுத்துப் பலியிடுமாறு இப்ராஹிமிற்கு கட்டளையிட்டார்.

மேற்கூறிய இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே, தியாகத்திருநாள் கொண்டாடப்படுகின்றது.
இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடுகளைப் பலியிட்டு, இந்த பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.
இதற்கான சிறப்பு தொழுகை இராமநாதபுரம் வசந்தம் மகால் வளாகத்தில் இஸ்லாமிய சமுதாய தலைவர் ஹைதர் அலி தலைமையிலான பதிவு பெற்ற தமுமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஏராளமான ஆண்களும், பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தனி இடத்தில் பெண்களும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
சிறப்பு தொழுகையில் கலந்து கொண்ட சிறுவர்கள் ஒருவரையொருவர் கட்டித்தழுவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தமுமுக மாவட்ட உலமாக்கள் அணி செயலாளர் மௌலவி ஏ.முஹம்மது ஹனீப் ரஷாதி உரை நிகழ்த்தினார்.இதில் மாவட்ட தலைவர் அன்வர் அலி, நகர் தலைவர் பரக்கத்துல்லா, நகர் செயலாளர் புரோஸ்கான், நகர் பொருளாளர் ராஜா முகமது, நகர் துணை தலைவர் மன்சூர் அலி, நகர் துணை செயலாளர்கள் அப்துல் பாரிக், சதக் தம்பி, பதுர்சமான், அன்வர் ராஜா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் முகமது யாசின், பாட்டாளி மக்கள் கட்சி இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் ஹக்கிம் ஆகியோர் பங்கேற்றனர்.
எம்.சோமசுந்தரம்.