இராமநாதபுரத்தில் மீன்வள பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை – மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்
ஜுலை,17,
இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் கோரிக்கையை ஏற்று இராமநாதபுரத்தில் மீன்வள பல்கலைக்கழகம் அமைக்க தமிழக முதல்வரிடம் வலியுறுத்தப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம், குந்துகால், இராமேஸ்வரம் மற்றும் மூக்கையூர் பகுதியில் மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்துமீன்பிடி இறங்குதளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை ஆணையர் முனைவர் மு.கருணாகரன், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெ.யு.சந்திரகலா, கூடுதல் ஆட்சியர் பிரவீன்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ( இராமநாதபுரம் ), செ.முருகேசன் ( பரமக்குடி ) , உட்பட பலர் உடனிருந்தனர் . ஆய்வு குறித்து அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, டாக்டர் கலைஞர் மீனவர்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் தந்து அவர்கள் வாழ்கை தரம் உயர்வு பெற வழிவகை செய்தார் . தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் மீனவர்களுக்கான குறைகளை நிவர்த்தி செய்து அவர்களின் வாழ்வு மேலும் உயர்வு பெறும் வகையில் பல்வேறு சலுகைகள் அளிப்பதற்காக மீனவ கிராமங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தி அவர்கள் குறைகளையும் , கோரிக்கை மனுக்களையும் பெற்று தெரிவிக்குமாறு அறிவறுத்தினார்கள். அதன்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் , குந்துகால் மற்றும் இராமேஸ்வரம் மற்றும் மூக்கையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேரடியாக சென்று மீனவ மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறியப்பட்டது.

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற போது தமிழகத்தில் கொரானா நோய் தாக்கம் அதிகம் காணப்பட்டது. தமிழக முதல்வர் மேற்கொண்ட சிறந்த நடவடிக்கையினால் கொரானா நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்து தற்போது மிகவும் குறைந்த நிலையில் உள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் மீனவர்களின் வாழ்வு வளம்பெற அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது . மீனவர்களின் கோரிக்கையினை ஏற்று இப்பகுதிகளில் தூண்டில் வளைவு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் குந்துகால் மீன்பிடி இறங்கு தளம் துறைமுகம் அளவில் உயர்த்தவும், இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் தரம் உயர்த்துவதற்கும், தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். மீன்பிடி தடைகாலத்தில் நிவாரணம் உயர்த்தி வழங்க நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டு வருகிறது . மீனவர்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணங்கள் கிடைக்கவும் , மீன் ஏற்றுமதிக்கு தேவையான சேமிப்பு கிடங்கு வசதிகளை ஏற்படுத்தவும் மேலும் திருநெல்வேலி, கன்னியாகுமரி தூத்துக்குடி பகுதிகளில் உள்ள மீனவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 25 விலையில் 300 விட்டர் மண்ணெண்ணெய் வழங்கப் படுவது போல் இப்பகுதிகளில் உள்ள மீனவர்களுக்கான விலை நிர்ணயம் செய்ய முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இராமநாதபுரம் எம்எல்ஏ காதர் பாட்சா முத்துராமலிங்கம் இப்பகுதியில் மீன்வள பல்கலைக்கழகம் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் . மீனவர்களுக்கான இட ஒதுக்கீடுகள் இக் கல்லூரிகளில் அதிகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மீன் விற்பனை சந்தை களில் மீன்களின் விலைப்பட்டியல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மீன்வளம் , மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை முன்னேற்றம் சார்ந்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் அனிதாஆர்.ராதாகிருஷ்ணன் தலைமையில்நடைபெற்றது. இந்நிகழ்வு களின் போது, இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) சி.இரவிச்சந்திரன் , மீன்வளத் துறை துணை இயக்குநர் இளம்வழுதி , உதவி இயக்குநர் கோபிநாத் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அமைச்சருக்கு எம்எல்ஏ காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் இராமநாதபுரம் தெற்கு நகர் திமுக பொறுப்பாளர் பிரவின் தங்கம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை ஒருங்கிணைப்பாளர் வாலாந்தரவை கே.ஜே.பிரவின், மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தௌபீக் அலி, இராமநாதபுரம் ஒன்றிய திமுக பிரமுகர் டாக்டர் டி.கே.குமார் உள்பட ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். சோமசுந்தரம்