இராமநாதபுரத்தில் கொரோனாவால் உயிரிழந்த ஓட்டுநரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு உன் உரிமை அனைத்து வாகன ஓட்டுநர் நல சங்கத்தினர் உதவி
இராமநாதபுரம், ஜுலை,26,
இராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு உன் உரிமை அனைத்து வாகன ஓட்டுநர் நல சங்கம் சார்பில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த சங்க உறுப்பினரின் குடும்ப சூழல் கருதி அவரது குழந்தைகள் பெயரில் பணம் டெபாசிட் செய்ததுடன் அவர்களின் குடும்பத்தினருக்கு அரிசி, மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்கினர்.
தமிழ்நாடு உன் உரிமை அனைத்து வாகன ஓட்டுநர் நல சங்கம் தமிழகம் முழுவதும் இயங்கி வருகிறது. இச்சங்கத்தினர் கொரோனா ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏராளமான நிவாரண பொருட்களை வழங்கினர். பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் காவல்துறையினர் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு தண்ணீர் மற்றும் உணவு பொருட்களை விநியோகம் செய்தனர். குறிப்பாக இராமநாதபுரம் மாவட்டத்தில் இவர்களின் இந்த செயல் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர்களின் பாராட்டை பெற்றது. இந்த நிலையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இச்சங்கத்தின் உறுப்பினர் ஆண்டித்தேவன் வலசையை சேர்ந்த ஓட்டுநர் இளங்கோவன் என்பவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களின் குடும்ப வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சங்க ஓட்டுநர்களின் பங்களிப்பாக இதன் மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமையில் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூபாய் 20 ஆயிரம் வீதம் ரூபாய் 40 ஆயிரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அவர்களின் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்தனர். மேலும் அவரது குடும்பத்திற்கு தேவையான அரிசி மளிகை காய்கறிகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் இராமநாதபுரம் மாவட்ட , ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சோமசுந்தரம்