இராமநாதபுரத்தில் கயிறு வாரியம் மூலம் ஏற்றுமதி மையம் தொடங்க நடவடிக்கை – தேசிய கயிறு வாரிய தலைவர் குப்புராமு தகவல்
இராமநாதபுரம், ஜுலை,20,
இராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய கயிறு வாரியம் மூலம் ஏற்றுமதி மையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய கயிறு வாரிய தலைவராக பொறுப்பேற்றுள்ள து.குப்புராமு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கேரளா மட்டுமின்றி தமிழகத்தின் விவசாயம் சார்ந்த பகுதிகளான பொள்ளாச்சி மற்றும் உடுமலையில் தென்னை சாகுபடி மட்டுமே, 80 சதவீதம் உள்ளது. இதனால், தேங்காய் வர்த்தகம், கொப்பரை உற்பத்தி, சீமாறு, தடுக்கு, பதநீர், கருப்பட்டி உற்பத்தி ஆகியவை இப்பகுதியில் அதிகமுள்ளது. அதேபோன்று, தேங்காய் மட்டையை மூலப்பொருளாக கொண்டு இயங்கும் தென்னை நார் உற்பத்தி நிறுவனங்களும் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் தென்னை நார், நார் துகள் கட்டி போன்றவை வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில் இந்த விவசாயிகளுக்கு உதவும் வகையில் தென்னை நார் தொழில் துவங்கவும், தொழிலை மேம்படுத்தவும் மத்திய கயிறு வாரியம் பல்வேறு திட்டங்களை அறிவித்து மானிய உதவி வழங்கி வருகிறது. புதியதாக தொழில் துவங்குவோருக்கு அதிகபட்சமாக, ஆறுலட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது. மேலும், ‘காயர் உஜ்ஜமி யோஜனா‘, திட்டத்தின் கீழ், வங்கி கடனுடன் கூடிய மானியம், முதலீட்டுக் கடன், 10 லட்சம் ரூபாய் வரை வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. மேலும் தென்னை நார் உற்பத்தியாளர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் மத்திய அரசு மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய கயிறு வாரியத்தின் அலுவலகம் கேரள மாநிலம் கொச்சியில் அமைந்துள்ளது.
தேசிய கயிறு வாரிய தலைவராக இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பாஜக செய்தி தொடர்பாளர் து.குப்புராமு மத்திய அரசால் அண்மையில் நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து கொச்சியில் உள்ள தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட அவர் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். அவருக்கு மாவட்ட எல்லையில் பாஜகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பரமக்குடி, மற்றும் இராமநாதபுரம் நகரில் அளித்த வரவேற்பை தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்ட பாஜக சார்பில் பாரதி நகர் பீமாஸ் ஹோட்டலில் வரவேற்பு விழா நடந்தது.
விழாவிற்கு மாவட்ட பாஜக தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். அப்போது தேசிய கயிறு வாரிய தலைவர் து. குப்புராமு செய்தியாளர்களிடம் கூறியதாவது, பாரத பிரதமர் நரேந்திர மோடியின் நல் ஆசியுடன் தேசிய கயிறு வாரிய தலைவராக பொறுப்பேற்றுள்ளேன்.

தென்னை உற்பத்தியில் தமிழகம் கேரளாவிற்கு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. குறிப்பாக கோவை, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் தென்னை விவசாயம் மூலம் பெரிய அளவில் உற்பத்தி உள்ளது. மேலும் தஞ்சாவூரில் இதன் பயிற்சி மையம் அமைந்துள்ளது. தொடர்ந்து தமிழகத்தில் தென்னை உற்பத்தி மூலம் கிடைக்க கூடிய மூலப்பொருட்களை கொண்டு மதிப்பு கூட்டு பொருள்களாக தயாரித்து உள்நாட்டு தேவைகளுக்கு பயன் படுத்துவதோடு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் வகையில் திட்டம் செயல்படுத் தப்படும். மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் இப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் பிரமாண்டமான கயிறு தொழிற்சாலை ஏற்படுத்தப்படும். கயிறு வாரியம் மூலம் தென்னை கழிவுகள் மூலம் உரம் தயாரித்து அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் ஏற்றுமதி மையம் அமைக்கப்படும். கிராமப்புறங்களில் வாழும் 80 சதவீத பெண்கள் மற்றும் இளைஞர்கள் சிறு தொழில்கள் தொடங்குவதன் மூலம் தொழில் முனைவோராக உருவாக வாய்ப்பு உள்ளது. மேலும் இப்பொறுப்பின் மூலம் மாவட்ட முன்னேற்றத்திற்கு என்னால் ஆன பணியை செய்வேன் என்றார்.
மேலும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில செயலாளர் கே.சண்முகராஜா, அதிமுக சிறுபான்மை பிரிவு செயலாளர் அன்வர் ராஜா, அதிமுக மாவட்ட செயலாளர் எம்ஏ முனியசாமி, அதிமுக பிரமுகர் ரெத்தினம், இராமநாதபுரம் ஒன்றிய அதிமுக செயலாளர் அசோக்குமார், நகர் அதிமுக செயலாளர் அங்குச்சாமி, மாவட்ட அதிமுக இளைஞர் பாசறை செயலாளர் பால்பாண்டியன், பாஜக மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் ஆத்மா கார்த்திக், பாஜக மாநில ஒபிசி அணி செயலாளர் ஒன்றிய கவுன்சிலர் எஸ்.முருகன், மாவட்ட பொதுச் செயலாளர் ஜி.குமார், இராமநாதபுரம் ஒன்றிய பாஜக தலைவர் காளீஸ்வரன், மண்டபம் ஒன்றிய தலைவர் முருகேசன், மண்டபம் கிழக்கு ஒன்றிய தலைவர் கண்ணன், அமைப்பு செயலாளர் பா.குமார், மாவட்ட செயலாளர் மணிமாறன், மாவட்ட பொருளாளர் எ.பி.கணபதி, மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட ஊடக பிரிவு தலைவர் எஸ்பி.குமரன், இராமநாதபுரம் நகர் தலைவர் வீரபாகு உள்பட பலர் கலந்து கொண்டனர். எம்.சோமசுந்தரம்.