இராமநாதபுரத்தில் உலக தாய்ப்பால் வாரவிழா விழிப்புணர்வு வாகனம் – கலெக்டர் டாக்டர் சந்திரகலா தொடங்கி வைத்தார்
இராமநாதபுரம்,ஆக,5,
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகள் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா ” உலக தாய்ப்பால் வாரவிழா ” விழிப்புணர்வு விளம்பர வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்து , மகளிருக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

பச்சிளம் குழந்தைகள் நலனுக்கு தாய்ப்பால் இன்றியமையாதது ஆகும் . ஒரு குழந்தைக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்தையும் தாய்ப்பால் வழங்குகிறது . குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் வரை தாய்ப்பாலை தவிர பிற செயற்கை உணவுகளை தவிர்ப்பது நலம் , தாய்ப்பால் கொடுப்பதால் தாய் – சேய்க்கு ஏற்படும் நன்மைகள் அளப்பரியது. அந்த வகையில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 01 முதல் 07 வரையில் ” உலக தாய்ப்பால் வாரம் ” கடைபிடிக்கப்படுகிறது . அதன்படி, இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் உலக தாய்ப்பால் வார விழா ” தொடர்பான விழிப்புணர்வு விளம்பர வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார் . இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 1,454 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன .
7,589 கர்ப்பிணி தாய்மார்கள், 6,749 பாலூட்டும் தாய்மார்கள் இணை உணவு உள்ளிட்ட இதர சேவைகள் பெற்று பயனடைந்து வருகின்றனர் . அந்தவகையில், இந்த விளம்பர வாகனத்தின் மூலம் மாவட்டத்தில் முக்கிய இடங்கள், ஊரக பகுதிகளில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது . விளம்பர வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்த மாவட்ட ஆட்சித் தலைவர், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட களப்பணியாளர்கள் அனைவரும் தங்களது பகுதிகளில் கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் நலனை பாதுகாக்கும் வகையில் அர்ப்பணிப்போடு பணியாற்றிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார் . இந்த நிகழ்வின் போது கூடுதல் ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.மு.காமாட்சி கனேசன் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) இரா.பழனிகுமார், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் .வி . ஜெயந்தி, வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் இராமநாதபுரம் கலா, திருப்புல்லாணி மீனாட்சி சுந்தரேஸ்வரி, நயினார் கோவில் கல்யாணி, பரமக்குடி விஸ்வாபதி, போகலூர் தேன்மொழி, திருவாடானை விஜயா, ஆர்.எஸ்.மங்கலம், மண்டபம் இந்திராகாந்தி, மற்றும் புள்ளியியல் ஆய்வாளர் மாணிக்கம், போஸான் அபியான் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாலா, உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஷாலினி, உட்பட அரசு அலுவலர்கள் , அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர் . எம்.சோமசுந்தரம்