இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி: இலங்கையை விளாசிய இந்தியா; அதிரடி காட்டிய தவான் – கிஷன் இணையால் வெற்றி
இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது இந்தியா.
நட்சத்திர ஆட்டக்காரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா, அஸ்வின், ஜடேஜா ஆகியோர் இல்லாமல் களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக வெற்றி பெற்றுள்ளது.
டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட இந்திய அணி எப்படி இலங்கை அணியை எதிர்கொள்ளும் என பலராலும் கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விகளுக்கு எல்லாம் தங்கள் பந்துவீச்சாலும், பவுண்டரிகளாலும் பதில் கூறியுள்ளது இளம் இந்திய அணி.
டாஸை வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. 10-ஆவது ஓவரில் தொடங்கிய இந்திய பந்து வீச்சாளர்களின் தாக்குதல் கடைசி வரை தொடர்ந்தது.
இலங்கை சார்பாக களமிறங்கிய வீரர்களில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ (33 ரன்கள்), சரித் அசலங்கா (38 ரன்கள்), இலங்கை அணித் தலைவர் தசுன் ஷனகா (39 ரன்கள்), சமிகா கருணரத்னெ (43 ரன்கள்) குவித்தனர். தீபக் சஹார் 7 ஓவர்களை வீசி 37 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், யுவேந்திர சாஹல் 10 ஓவர்களை வீசி 52 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 9 ஓவர்களை வீசி 48 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஹர்திப் பாண்டியா 5 ஓவர்களை வீசி 34 ரன்களைக் கொடுத்து 1 விக்கெட்டையும், க்ருனால் பாண்டியா 10 ஓவர்களை வீசி 26 ரன்களைக் கொடுத்து 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இவரின் எகானமி 2.60 என்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
தீபக் சஹார், குல்தீப் யாதவ், க்ருனால் பாண்டியா ஆகியோர் தலா ஒரு ஓவர் மெய்டன் வீசினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவழியாக 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 262 ரன்களைக் குவித்தது இலங்கை அணி. 263 ரன்களை அடித்தால் வெற்றி என களமிறங்கியது இந்திய அணி.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ப்ரித்வி ஷா அதிரடியாக ரன்களைக் குவிக்கத் தொடங்கினார். மறுபக்கம் இந்திய அணியின் தலைவராக இப்போட்டியில் களமிறங்கிய தவான் பொறுமை காட்டினார். தனஞ்செய டி சில்வா வீசிய ஆறாவது ஓவரின் மூன்றாவது பந்தில் தன் விக்கெட்டைப் பறிகொடுத்தார் ப்ரித்வி ஷா. தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்டிய ஷா, 24 பந்தில் 43 ரன்களைக் குவித்தார். இதில் 9 பவுண்டரிகளும் அடக்கம். அடுத்து ஒன் டவுன் இறங்கிய இஷான் கிஷன் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடியவர். இது இவருக்கு முதல் சர்வதேச ஒருநாள் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது. அவ்வாய்ப்பை இஷான் கிஷன் சரியாக பயன்படுத்திக் கொண்டார் என்று தான் கூற வேண்டும்.
ஷிகர் தவான் – கிஷன் இணை க்ளாஸ் – மாஸ் என கலந்து கட்டி இந்தியாவின் ரன் ரேட்டை எகிற வைத்தார்கள். இந்த இணை 74 பந்துகளை எதிர்கொண்டு 85 ரன்களைக் குவித்தது. 18ஆவது ஓவரின் ஐந்தாவது பந்தில் இலங்கை கீப்பர் மினோத் பனுகாவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார் இஷான் கிஷன். 42 பந்துகளில் 59 ரன்கள், 8 பவுண்டரி, 2 சிக்ஸர் என சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் இஷான். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மணீஷ் பாண்டே 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களம் இறங்கினார் சூர்யகுமார் யாதவ். இவரும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர். இவருக்கும் இது முதல் சர்வதேச ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. தவானோடு கைகோர்த்த சூர்யகுமார் நிதானமாக பந்துகளை தேர்வு செய்து விளையாடினார். ஒரு பக்கம் அனுபவஸ்தவரான ஷிகர் தவான், மறுபக்கம் முதன்முதலாக சர்வதேச ஒருநாள் போட்டியில் களம் காணும் சூர்யகுமார் என ஆட்டம் இந்திய அணிக்கு சிறப்பாக நிறைவடைந்தது. 20 பந்துகளை எதிர்கொண்ட சூர்யகுமார் 31 ரன்களைக் குவித்தார். இதில் 5 பவுண்டரிகளும் அடக்கம்.
IMAGஇந்த போட்டியில் கேப்டனாக களமிறங்கிய ஷிகர் தவான், பொறுமையாக ரன்களைக் குவித்து இந்தியாவை வெற்றி மேடை ஏற வைத்தார். 95 பந்துகளை எதிர்கொண்டு 86 ரன்களைக் குவித்தார். இலங்கையின் தனஞ்செய டி சில்வா 5 ஓவர்களை வீசி 49 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். லக்ஷன் சண்டகன் 8.4 ஓவர்களை வீசி 53 ரன்களைக் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். இந்தியா 36.4 ஓவர்களிலேயே 263 ரன்களைக் குவித்து இலங்கைக்கு எதிரான தன் முதல் வெற்றியை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது.