திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் 2021-2022-ம் ஆண்டுக்கான தனி நிதிநிலை அறிக்கை தொடர்பாக கருத்துக்கேட்புக்கூட்டம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு,எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிவசங்கர் ஆகியோர் தலைமை தாங்கினர்.
வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை அரசு செயலாளர் கே.சி.சமயமூர்த்தி, வேளாண் மற்றும் உழவர்நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை ஆணையர் வள்ளலார், தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள்துறை இயக்குனர் பிருந்தாதேவி, கலெக்டர் சிவராசு மற்றும் எம்.எல்.ஏ.க்கள், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அப்போது அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், “முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த 7 திட்டங்களில் வேளாண் உற்பத்தியை இரட்டிப்பாக்குவது, இரு போக சாகுபடி செய்வது போன்றவை குறித்து ஆலோசிக்கவும், வேளாண் பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் பற்றியும் கருத்து கேட்பதற்காக இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் தான் வேளாண்மைக்கு தனிபட்ஜெட் அறிவிக்கப்படும் என முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்” என்று பேசினார்.
கூட்டத்தை தொடர்ந்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் ஒவ்வொருவராக தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
கூட்டத்துக்கு பிறகு, அமைச்சர் நேரு நிருபர்களிடம் கூறுகையில், இந்த கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டி நிலத்தடி நீரை பெருக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். தடையின்றி மின்சாரம் கிடைக்கவும், வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலையை நிர்ணயித்து உடனடியாக வழங்க வேண்டும் என்று கூறி உள்ளனர். விவசாயிகளின் அனைத்து கோரிக்கைள் குறித்து முதல்-அமைச்சரிடம் தெரிவிக்கப்படும். அதன்பிறகு எந்ததெந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவது என்பது குறித்து முதல்-அமைச்சர் முடிவு செய்வார்” என்றார்.
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறும்போது, “விவசாயத்துக்காக கடைமடை பகுதிக்கு இன்னும் தண்ணீர் கிடைக்கவில்லை என்று சொல்வது எல்லாம் தவறான கருத்து. நாங்களும் கடைமடை பகுதியில் தான் இருக்கிறோம். நாகை, மயிலாடுதுறை உள்பட அனைத்து கடைமடை பகுதிகளுக்கும் தண்ணீர் வந்துள்ளது இவ்வாறு அவர் கூறினார்.