ஆர்சிபி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவிப்பு
ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கிரிக்கெட் வீரர் விராட் கோலி அறிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டியின் தற்போதைய ஐக்கிய அரபு எமிரேட் ஆட்டங்களுக்குப் பிறகு கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் தொடர்ந்து ஆர்சிபி அணிக்காக விளையாடுவேன் என்றும் கோலி கூறியிருக்கிறார்.
இந்த வார தொடக்கத்தில், வரவிருக்கும் ஐசிசி டி 20 உலக கோப்பைக்குப் பிறகு டி20 போட்டிகளில் இந்திய கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கோலி அறிவித்திருந்தார், ஆனால் ஒருநாள் மற்றும் டெஸ்டில் அவர் கேப்டனாக தொடருவதாக கூறினார். ஆர்சிபி அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டதில் இருந்து அந்த அணியை 132 போட்டிகளில் விராட் கோலி வழிநடத்தினார்.
இந்த எண்ணிக்கை, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணிக்காக எம்.எஸ் தோனி வழிநடத்திய 196 ஆட்டங்களுக்குப் பிந்தைய இரண்டாவது மிகப்பெரிய வழிநடத்தலாக கருதப்படுகிறது. ஆர்சிபி அணி கோலியின் தலைமையில் 60 போட்டிகளில் வென்றுள்ளது. 65 இல் தோல்வியடைந்துள்ளது. மூன்று ஆட்டங்கள் சமநிலையில் முடிந்தன.